/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பால் உற்பத்தியாளர்கள் மானியத்திற்கு 'மல்லுக்கட்டு' லாபம் ஈட்டும் மதுரை ஆவின் வழங்க முன்வருமா
/
பால் உற்பத்தியாளர்கள் மானியத்திற்கு 'மல்லுக்கட்டு' லாபம் ஈட்டும் மதுரை ஆவின் வழங்க முன்வருமா
பால் உற்பத்தியாளர்கள் மானியத்திற்கு 'மல்லுக்கட்டு' லாபம் ஈட்டும் மதுரை ஆவின் வழங்க முன்வருமா
பால் உற்பத்தியாளர்கள் மானியத்திற்கு 'மல்லுக்கட்டு' லாபம் ஈட்டும் மதுரை ஆவின் வழங்க முன்வருமா
ADDED : பிப் 14, 2025 06:00 AM
மதுரை: மதுரையில் பால் உற்பத்தியாளர்களுக்கு மாட்டுத்தீவன மானியம் மீண்டும் வழங்க வேண்டும் என பால் உற்பத்தியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மதுரையில் 800க்கும் மேற்பட்ட சங்கங்களில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உற்பத்தியாளர்கள் உள்ளனர். பால் கொள்முதலை அதிகரிக்கும் வகையில் ஆவின் சார்பில் மாடுகளுக்கான தீவனம் 25 சதவீதம் மானியத்தில் வழங்கப்பட்டது. ஒன்றரை ஆண்டுக்கு முன் ஆவின் நஷ்டத்தில் இயங்கியதால் இழப்பை தவிர்க்கும் வகையில் மாட்டுத்தீவனத்திற்கு வழங்கப்பட்ட மானியத்தை ஆவின் நிர்வாகம் நிறுத்தியது. தற்போது மதுரை ஆவின் லாபத்தில் இயங்குகிறது. இதனால் நிறுத்தி வைக்கப்பட்ட தீவன மானியத்தை மீண்டும் வழங்க வேண்டும் என உற்பத்தியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் மாவட்ட தலைவர் வெண்மணி சந்திரன் கூறியதாவது: மாட்டுத்தீவனம் 50 கிலோ கொண்ட ஒரு மூடை ரூ.1250 ஆக விற்கப்படுகிறது. சில மாதங்களுக்கு முன் இதன் விலை ரூ.700 முதல் ரூ.800 வரையே இருந்தது. இதனால் தீவனங்களுக்காக உற்பத்தியாளர்கள் அதிகம் செலவிட வேண்டியுள்ளது. நஷ்டத்தை காரணம் காட்டி இதற்கான 25 சதவீதம் மானியத்தை ஆவின் நிறுத்தியது. தற்போது லாபம் ஈட்டுவதால் அதை மீண்டும் வழங்க வேண்டும்.
ஆவின் லாபம் மூலம் விருதுநகரில் மாட்டுத்தீவனம் தயாரிக்கும் யூனிட்டை ஏற்படுத்த முயற்சி நடக்கிறது. அதை மதுரையிலேயே துவக்க வேண்டும். ஏற்கனவே கப்பலுாரில் அதற்கான போதிய இடவசதி உள்ளது. அவ்வாறு அமைந்தால் மதுரை உற்பத்தியாளர்கள் அதிகம் பயன்பெறுவர் என்றார்.
தடையின்றி ஊக்கத்தொகை
கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளதாவது: பால் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் வகையில் மதுரை ஆவினுக்கு உட்பட்ட உற்பத்தியாளர்களுக்கு லிட்டருக்கு தலா ரூ.3 ஊக்கத் தொகை 2023 டிச.,18 முதல் சம்பந்தப்பட்ட உற்பத்தியாளர்களின் வங்கிக் கணக்கிற்கே நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதே நடைமுறை தான் இனியும் தொடரும். இதுவரை 219 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களை சேர்ந்த 3575 உற்பத்தியாளர்களுக்கு அவர்களின் வங்கிக் கணக்கில் ரூ. 56 லட்சத்து 56 ஆயிரத்து 814 செலுத்தப்பட்டுள்ளது. எனவே ஆவினுக்கு பால் வழங்கும் உற்பத்தியாளர்கள் தங்கள் வங்கி கணக்கை உடன் வழங்கினால் ஊக்கத் தொகை தடையின்றி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.