போராட்ட நாட்களுக்கான சம்பளம் வழங்கப்படுமா: ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு
போராட்ட நாட்களுக்கான சம்பளம் வழங்கப்படுமா: ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு
UPDATED : நவ 25, 2026 07:18 PM
ADDED : நவ 25, 2026 06:54 PM
மதுரை: தங்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெற்ற நிலையில், போராட்ட நாட்களில் பிடித்தம் செய்யப்பட்ட சம்பளத்தையும் விடுவிக்க வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழகத்தில் 1.6.2009க்கு பின் நியமிக்கப்பட்ட 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு தற்போது வரை 17 ஆண்டுகளாக சம்பள முரண்பாடு நிலவுகிறது. இதை களையக் கோரி ஆசிரியர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். இதுதொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 27 போராட்ட நாட்களுக்கான சம்பளம் நிறுத்தி வைக்கப்பட்டது.
த.வெ.க., ஆட்சி ஏற்பட்ட பின் அண்மையில் ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்பட்டது. இதையடுத்து போராட்ட நாட்களில் பிடித்தம் செய்யப்பட்ட சம்பளத்தையும் விடுவிக்க வேண்டும் ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் மாநில பொதுச் செயலாளர் ராபர்ட் கூறுகையில், வழக்குகளை வாபஸ் பெற்ற அரசுக்கு நன்றி தெரிவிக்கிறோம். இயக்குநராக பொறுப்பேற்ற நரேஷிடம், இடைநிலை ஆசிரியர்களின் போராட்ட நாட்களில் பிடித்தம் செய்யப்பட்ட சம்பளத்தை விடுவிப்பது, இடைநிலை ஆசிரியரின் 17 ஆண்டுகள் கோரிக்கைகள் குறித்து தெரிவித்தோம். அ.தி.மு.க., தி.மு.க., ஆட்சிகளிலும் எங்கள் போராட்டம் தொடர்ந்தன. இந்த ஆட்சியிலாவது தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.
