/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இழுபறியாகும் மதுரை மாநகராட்சி புதிய மேயர் தேர்வு அமைச்சர்கள் 'மோதலுக்கு' முற்றுப்புள்ளி வைப்பாரா முதல்வர்
/
இழுபறியாகும் மதுரை மாநகராட்சி புதிய மேயர் தேர்வு அமைச்சர்கள் 'மோதலுக்கு' முற்றுப்புள்ளி வைப்பாரா முதல்வர்
இழுபறியாகும் மதுரை மாநகராட்சி புதிய மேயர் தேர்வு அமைச்சர்கள் 'மோதலுக்கு' முற்றுப்புள்ளி வைப்பாரா முதல்வர்
இழுபறியாகும் மதுரை மாநகராட்சி புதிய மேயர் தேர்வு அமைச்சர்கள் 'மோதலுக்கு' முற்றுப்புள்ளி வைப்பாரா முதல்வர்
ADDED : அக் 30, 2025 05:15 AM
மதுரை: சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் சென்னையை அடுத்த பெரிய மாநகராட்சியான மதுரைக்கு புதிய மேயரை தேர்வு செய்ய முடியாமல் தி.மு.க., திணறுகிறது.
தமிழகத்தை உலுக்கிய ரூ.150 கோடிக்கும் மேலான மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேடு விவகாரம் ஆளுங்கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளின் கடும் விமர்சனத்தால் முதல்வர் ஸ்டாலின் உத்தரவால் 5 மண்டல தலைவர்கள், 2 நிலைக் குழு தலைவர்கள் ஒரே நாளில் பதவி விலகினர்.
மேயராக இருந்த இந்திராணியின் கணவர் பொன்வசந்த் உட்பட 24 பேர் கைது செய்யப்பட்டனர். மாநகராட்சி அதிகாரிகள் உட்பட 16 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். முறைகேடு புகார் குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்திவரும் நிலையில், மேயர் இந்திராணியையும் அக்.,15 ல் பதவியை ராஜினாமா செய்ய வைத்தது தி.மு.க.,.
இதனால் 25 லட்சத்திற்கும் மேல் மக்கள் தொகை கொண்ட மாநகராட்சிக்கு மேயர், மண்டல தலைவர்கள், நிலைக் குழு தலைவர்கள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. 4 கவுன்சிலர்களை கொண்டு கூட்டணியில் உள்ள மார்க். கம்யூ.,வை சேர்ந்த துணைமேயர் தலைமையில் பெயரளவில் மாநகராட்சி செயல்படுகிறது. துணைமேயர் தலைமையில் மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தை நடத்த விரும்பாத தி.மு.க., அக்டோபர் கூட்டத்தை ரத்து செய்தது. 100 வார்டுகளில் ஏற்படும் மக்கள் பிரச்னைகளுக்கான தீர்வு, வார்டுகளில் திட்டங்கள் மேற்கொள்வது கேள்விக்குறியாகியுள்ளன.
புதிய மேயரை தேர்வு செய்ய தி.மு.க., தலைமை தயாராக இருந்தும் அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன் ஆகியோருக்கு இடையே யார் ஆதரவாளருக்கு மேயர் பதவி பெற்றுத்தருவது என்பதில் மறைமுக ஈகோ யுத்தம் நடக்கிறது. இதனால் மேயர் பதவி காலியாகி 15 நாட்களுக்கும் மேலாக புதிய மேயரை தேர்வு செய்ய முடியாமல் தி.மு.க., திணறுகிறது.
நேர்மைக்கு பஞ்சமா இவ்விவகாரத்தை அரசியல் ரீதியாக கையில் எடுத்துள்ள அ.தி.மு.க., 'சொத்துவரி முறைகேடு விவகாரத்தில் யார் தவறு செய்தாலும் கட்சி நடவடிக்கை எடுக்கும் என சாட்டையை சுழற்றிய முதல்வர் ஸ்டாலின், அவர் ராஜினாமா செய்ய வைத்த பதவிகளை அவராலேயே நிரப்ப முடியாமல் திணறுகிறார். ஆளுங்கட்சியில் 69 கவுன்சிலர்கள் இருந்தும் அவர்களிடம் நேர்மைக்கு பஞ்சமா. அமைச்சர்களை கட்டுப்படுத்த முடியாத கட்சியாக தி.மு.க., உள்ளது' என தொடர்ந்து விமர்சனம் செய்கிறது. இது ஆளுங்கட்சி நிர்வாகிகளை கொந்தளிக்க வைத்துள்ளது.
முற்றுப்புள்ளி வைப்பாரா முதல்வர் தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது: சென்னை மாமல்லபுரத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்றுமுன்தினம் நடந்த 'என் ஓட்டுச்சாவடி வெற்றி ஓட்டுச்சாவடி' என்ற தலைப்பிலான பயிற்சி போல் எத்தனை முறை நடத்தினாலும் மதுரையில் உள்ளது போன்ற உட்கட்சி மோதல்களுக்கு தலைமை முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் எவ்வித பலனும் கிடைக்காது.
அந்த பயிற்சியில் நிர்வாகிகளுக்கு தேர்தல் வெற்றிக்கான ஏராளமான 'அசைன்மெண்ட்'களை தலைமை கொடுத்துள்ளது. ஆனால் மதுரையில் மேயர் உள்ளிட்ட முக்கிய பதவிகள் காலியாக கிடக்கும் நிலையில் 100 வார்டுகளில் அந்த 'அசைன்மெண்ட்'களை முழுமையாக நிறைவேற்ற முடியுமா என்பது சந்தேகம். எனவே அ.தி.மு.க., உள்ளிட்ட எதிர்கட்சிகள் விமர்சனத்தை முறியடிக்கும் வகையில் மதுரையில் புதிய மேயரை முதலில் நியமிக்க வேண்டும். அடுத்து மண்டல தலைவர்கள் பதவிகளிலும் தகுதியான கவுன்சிலர்களை நியமிக்க முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

