/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கண்ணீர் வடிக்கும் கண்மாய் கவனிக்குமா மாவட்ட நிர்வாகம்
/
கண்ணீர் வடிக்கும் கண்மாய் கவனிக்குமா மாவட்ட நிர்வாகம்
கண்ணீர் வடிக்கும் கண்மாய் கவனிக்குமா மாவட்ட நிர்வாகம்
கண்ணீர் வடிக்கும் கண்மாய் கவனிக்குமா மாவட்ட நிர்வாகம்
ADDED : ஏப் 28, 2025 06:20 AM

மதுரை: ஆகாயத் தாமரைகள் வளர்ந்தும், முறையான பராமரிப்பு இன்றி குப்பை கொட்டும் இடமாகவும், கழிவுநீரால் சூழ்ந்தும், ஆக்கிரமிப்பாலும் மதுரை செல்லுார் கண்மாய் அழிந்து கொண்டிருக்கிறது.
மதுரை பூதகுடி, பனங்காடி, ஆனையூர் உள்பட பல கண்மாய்கள் கழிவுநீர் வாய்க்காலாக மாறிவிட்டது. 230 ஏக்கரில் இருந்த செல்லுார் கண்மாய் பராமரிப்பின்றி ஆக்கிரமிப்பால் குறுகிவிட்டது. கண்மாய் முழுமையாக துார்வாரி 10 ஆண்டுகளாகிறது. கண்மாயின் ஒரு பகுதியை மட்டும் 2 ஆண்டுகளுக்கு முன் சுத்தம் செய்தனர்.
தொடர்ந்து ரூ. 4 கோடி மதிப்பில் வேலி, பேவர் கற்கள், விளக்குகள் அமைத்தனர். எனினும் முறையான பராமரிப்பு இல்லாததால் அவையும் பயனற்று போய்விட்டது. குடியிருப்புகளின் கழிவுநீர் குழாய்களை கண்மாய்க்குள் இணைத்துள்ளனர். கழிவுநீர் சேர்ந்ததால் மீன்கள் செத்து மிதக்கின்றன. பாசனம், குடிநீருக்கு பயன்பட்ட கண்மாய் துர்நாற்றத்துடன் கொசு உற்பத்தியாகும் இடமாகிவிட்டது. நிலத்தடி நீர்மட்டமும் குறைந்துகொண்டே போகிறது. கண்மாய் உள்ளே கடைகள், பெரிய நிறுவனங்கள், வீடுகள் என உருவாகி பட்டா நிலங்களாக மாற்றப்பட்டுள்ளன.
மக்களிடம் விழிப்புணர்வில்லை
நீர்நிலைகள் இயக்க தலைவர் அபுபக்கர்: எனது சிறுவயதில் இங்கு தண்ணீர் துாய்மையாக, தெளிவாக இருக்கும். ஆண்டுகள் செல்லச்செல்ல இக்கண்மாயை பலரும் ஆக்கிரமித்து விட்டனர். பல முறை முறையிட்டதால் 2023 ல் கண்துடைப்பாக பராமரிப்பு செய்தனர். இங்கு நாங்கள் பனை விதை வைத்தோம். அதனை முழுமையாக அகற்றி பேவர் கற்கள் அமைத்தனர். அமைத்த விளக்குகளை எடுத்துச் சென்று விட்டனர். இரவில் சமூக விரோத செயல்கள் நடக்கிறது. இதை தடுக்க கண்காணிப்பு கேமரா அமைத்து, சுற்றுச்சுவர் கட்ட வேண்டும். ஆழமாக, குடிநீர் ஆதாரமாக இருந்த கண்மாய் அழிந்து கொண்டே போவது வேதனையை தருகிறது. கண்மாயை அளவீடு செய்து, தனிக் குழு அமைத்து கண்காணிக்க வேண்டும் என்றார்.