/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை மாநகராட்சி வைகை வடகரை வார்டுகளில் தீருமா குடிநீர் பிரச்னை ....
/
மதுரை மாநகராட்சி வைகை வடகரை வார்டுகளில் தீருமா குடிநீர் பிரச்னை ....
மதுரை மாநகராட்சி வைகை வடகரை வார்டுகளில் தீருமா குடிநீர் பிரச்னை ....
மதுரை மாநகராட்சி வைகை வடகரை வார்டுகளில் தீருமா குடிநீர் பிரச்னை ....
ADDED : ஆக 04, 2025 04:58 AM

மதுரை- மதுரை ஆரப்பாளையம் பகுதியில் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக மாநகராட்சி வைகை வடகரை பகுதியில் 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் பிரச்னை நிலவுகிறது. குழாய் சீரமைப்பு பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர். மாநகராட்சி 100 வார்டுகளுக்கும் நாள் ஒன்றுக்கு 220 எம்.எல்.டி., குடிநீர் தேவையாக உள்ளது. இதற்காக மணலுார், தச்சம்பத்து, வைகை 1, வைகை 2, காவேரி கூட்டுக்குடிநீர், இரும்பாடி, திருப்பரங்குன்றம் குடிநீர்த் திட்டங்கள் மூலம் வினியோகிக்கப்படுகின்றன.
மாநகராட்சி வடகரை வார்டுகளுக்கு குடிநீர் செல்லும் 'மெகா' குழாயில் ஆரப்பாளையம் வைகையாற்று பகுதியில் திடீர் உடைப்பு ஏற்பட்டது. இதனால் செல்லுார். சொக்கிகுளம், கிருஷ்ணாபுரம் காலனி, விஸ்வநாதபுரம், புதுார், அண்ணாநகர், கே.கே.நகர் உட்பட 15க்கும் மேற்பட்ட வார்டுகளில் குடிநீர் பிரச்னை 10 நாட்களுக்கும் மேலாக நீடிக்கிறது.
பிரச்னையை தவிர்க்க மாநகராட்சி லாரிகள் மூலம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. ஆனாலும் பல பகுதிகளில் குடிநீர் முறையாக கிடைப்பதில்லை. தனியாரிடம் குடம் ரூ.10க்கு வாங்கி பயன்படுத்துவதாக மக்கள் புலம்புகின்றனர்.
இதனால் ஆரப்பாளையம் பகுதியில் குழாயை மாற்றும் பணியை மாநகராட்சி விரைவுபடுத்த மக்கள் வலியுறுத்துகின்றனர்.
மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: வைகை 1, வைகை 2 குடிநீர் திட்டங்களுக்காக பதிக்கப்பட்ட 450 எம்.எம்., 500 எம்.எம்., அளவுள்ள இரண்டு மெகா குழாய்கள் 25 ஆண்டுகள் பழமையானவை. இக்குடிநீர் அரசரடி நீரேற்று நிலையத்தில் இருந்து 'பம்பிங்' செய்யப்பட்டு, மேல்நிலை தொட்டிகளில் ஏற்றி, வடகரை பகுதி வார்டுகளுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. இந்த மெகா குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்தாலும் மீண்டும் உடைப்பு ஏற்படும் என்பதால், புதிய குழாய்கள் அமைக்க கமிஷனர் சித்ரா உத்தரவிட்டுள்ளார்.
இதனால் பெரிய அளவில் பணிகள் நடக்கிறது. தற்போது பணிகள் முடியும் நிலையில் உள்ளது. குறைவான வேகத்தில் குடிநீர் வினியோகிக்கும் பணி துவங்கியுள்ளது. விரைவில் குடிநீர் பிரச்னை சரியாகும் என்றனர்.