/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அணை பராமரிப்புக்கு கேரள நீர்ப்பாசனத்துறை அனுமதி வழங்குவதா
/
அணை பராமரிப்புக்கு கேரள நீர்ப்பாசனத்துறை அனுமதி வழங்குவதா
அணை பராமரிப்புக்கு கேரள நீர்ப்பாசனத்துறை அனுமதி வழங்குவதா
அணை பராமரிப்புக்கு கேரள நீர்ப்பாசனத்துறை அனுமதி வழங்குவதா
ADDED : டிச 15, 2024 05:41 AM
மதுரை முல்லைப் பெரியாறு அணை பராமரிப்புக்கு கேரள நீர்ப்பாசனத்துறை அனுமதி வழங்குவது என்பது உச்ச நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் செயல். அனுமதி கடிதத்தை தமிழக அரசு நிராகரிக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் கேரளாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இரு நாட்களுக்கு முன் அணையை பழுதுபார்க்க கேரள நீர்ப்பாசனத்துறை அனுமதி வழங்கியதாக தேனி கலெக்டர் ஷஜீவனா அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார். இதற்கு விவசாயிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.
இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுத்தலைவர் பி. ஆர். பாண்டியன் கூறியதாவது: முல்லைப்பெரியாறு அணையின் முழு உரிமையும் தமிழக அரசுக்கு சொந்தம் என உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. 2021 லிருந்து பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள கேரள வனத்துறை அனுமதிக்க மறுக்கிறது. பராமரிப்புக்கான கட்டுமானப் பொருட்களை கொண்டு செல்ல உள்ளதாக கேரள வனத்துறைக்கு தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் மே மாதம் கடிதம் எழுதினர். தென்மேற்கு பருவமழை முடிந்த நிலையில் டிச. 4 ல் இரு கனரக வாகனங்களில் கட்டுமானப் பொருட்களை கொண்டு சென்ற போது கேரள வனத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். இதையடுத்து தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் தற்போது வரை போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். இந்நிலையில் அணையை பழுதுபார்க்க கேரள நீர்ப்பாசன துறை அனுமதி வழங்கியதாக தேனி கலெக்டர் ஷஜீவனா அறிக்கை மூலம் தெரிவித்துள்ளதை ஏற்றுக் கொள்ள முடியாது.
கேரள நீர்ப்பாசனத்துறையின் புதிய அனுமதி என்பது ஏற்கனவே தமிழகம் பெற்று வந்த உரிமையை அபகரித்துக் கொள்வதற்கு வழிவகுக்கும். அணை வலுவிழந்துள்ளதாக தெரிவித்து அதை உறுதிப்படுத்த கேரளா முயற்சிக்கிறது.
அணையை ஆண்டுதோறும் பராமரிப்பது என்பது இயல்பான ஒன்று. அணையின் நீர் நிர்வாக கட்டுப்பாடுகளை கேரள அரசு தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக உறுதிப்படுத்தவே அவர்களின் அனுமதி மற்றும் நேரடி பார்வையில் தான் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்கிறது. இது உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் செயல். தமிழக அரசு கேரள நீர்ப்பாசனத் துறையின் சட்டவிரோதமான அனுமதி கடிதத்தை நிராகரிக்க வேண்டும் என்றார்.