ADDED : நவ 10, 2025 01:16 AM

சோழவந்தான்: சோழவந்தான் அருகே நடுவூரில் தாழ்ந்த பாலத்தை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர்.
அப்பகுதி மணிவண்ணன் கூறியதாவது: இங்கு நடுவூர், காலனியில் நுாற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் ஏராளமானோர் வசிக்கிறோம். திருமங்கலம் கால்வாயில் இருந்து வெளியேறும் உபரிநீர் மலையூர், நடுவூர் வழியே சென்று முதலைக்குளம் கண்மாயில் கலக்கிறது. நடுவூரில் குடியிருப்புகளுக்கு செல்வதற்கு கால்வாய் மீது பல ஆண்டுகளுக்கு முன்பு கல்பாலம் அமைக்கப்பட்டது. தற்போது மெயின் ரோடு உயர்ந்து கால்வாயும் பாலமும் பள்ளமாகிவிட்டன.
கால்வாயும் முறையாக துார்வாரப்படாததால் மேடாகி பாலத்தின் அடியில் குறுகிய இடைவெளி மட்டுமே உள்ளது. இதனால் மழைக்காலங்களில் கால்வாயில் வெளியேறும் தண்ணீர் பாலத்தின் அடியில் செல்ல முடியாமல் குடியிருப்புகளுக்குள் செல்கிறது. இதனால் வீடுகள் முழுதும் தண்ணீரில் மிதக்கும் நிலை ஏற்படுகிறது. மேலும் கால்வாயில் வரும் பாம்பு, பூரான் உள்ளிட்ட விஷ ஜந்துக்களால் அச்சத்துடன் வாழும் நிலை உள்ளது. பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பாலத்தை சீரமைக்க வேண்டும் என்றார்.

