/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை மாவட்டத்தில் வண்ணத்துப்பூச்சி பூங்கா அமையுமா?
/
மதுரை மாவட்டத்தில் வண்ணத்துப்பூச்சி பூங்கா அமையுமா?
மதுரை மாவட்டத்தில் வண்ணத்துப்பூச்சி பூங்கா அமையுமா?
மதுரை மாவட்டத்தில் வண்ணத்துப்பூச்சி பூங்கா அமையுமா?
ADDED : ஜூலை 02, 2024 06:18 AM

சென்னை, திருச்சி, பொள்ளாச்சியில் அரசு வண்ணத்துப்பூச்சி பூங்காக்கள் வயது வேறுபாடின்றி அனைவரையும் கவர்கின்றன. மதுரையில் சாத்தையாறு அணை, மஞ்சமலையான் கோயில் ஓடை, பழநியாண்டவர் அணையின் சிறுமலை அடிவாரம், அசுவமாநதி அணை, அய்யனார் ஓடை அணை உள்ளிட்ட மேற்குதொடர்ச்சி மலை அடிவாரம், புல்லுாத்து ஓடை வரும் நாகமலை அடிவாரங்களில் வண்ணத்துப்பூச்சிகள் அதிகமாக உள்ளன.
இவை உணவுக்காகவும், முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யவும் குறிப்பட்ட தாவரங்களை சார்ந்து வாழ்கின்றன. பூந்தேன், ஈரமணல், மட்கும் கழிவுகள், விலங்குகளின் சாணம், சிறுநீரில் கிடைக்கும் உப்பு தாதுக்களை தேடி வருகின்றன. இத்தகைய இடங்களை ஆய்வு செய்து வண்ணத்துப்பூச்சி பூங்கா அமைக்க இடத்தை தேர்வு செய்யலாம் என்கிறார் மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை உறுப்பினர் தமிழ்தாசன்.
அவர் கூறியதாவது: சிவப்புடல் அழகி பட்டாம்பூச்சிகள் இலங்கைக்கும் அங்கிருந்து இந்தியாவிற்கும் வலசை வருகின்றன. வெந்தய வரியன், நீல வேங்கை, கருநீல வேங்கை, வெண்புள்ளிக் கருப்பன், இரு பட்டைக் கருப்பன் இனங்கள் மழைக்காலங்களில் வலசை போகின்றன. தென்மேற்கு பருவமழையின் போது மேற்கில் இருந்து கிழக்குத் தொடர்ச்சி மலைகளுக்கும், வடகிழக்கு பருவமழையின் போது கிழக்கில் இருந்து மேற்குத்தொடர்ச்சி மலைகளுக்கும் வலசை செல்கின்றன. கொடைக்கானல் மலைகளில் இருந்து இவைகள் சிறுமலை, அழகர்மலை பகுதிகளுக்கு வலசை செல்வது கண்டறியப்பட்டுள்ளது.
மதுரையின் அடையாளமாக விளங்கும் நீர்க்கடம்ப மரங்களை மட்டுமே இனப்பெருக்க தாவரமாக கொண்டுள்ள தளபதி பட்டாம்பூச்சியும் இங்குள்ளது. மேற்குத்தொடர்ச்சியின் உயரமான மலைப்பகுதியில் காணப்படும் இளவேனில் சிறகன் வகை அழகர் மலையின் தாழ்வான பகுதிகளில் காணப்படுகிறது. மதுரையில் இதுவரை 150க்கும் மேற்பட்ட வண்ணத்துப்பூச்சி இனங்களும், 30க்கு மேற்பட்ட தட்டான் இனங்களும் ஆவணம் செய்யப்பட்டுள்ளது.
வண்ணத்துப்பூச்சிகள் உணவுக்காகவும், முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யவும் நொச்சி, பசுமுன்னை, விழுதி, மாமரம், சிறுதேள் கொடுக்கு, நார்த்தம், புங்கன், புங்கம் உள்ளிட்ட 30 வகை தாவரங்களை சார்ந்து வாழ்கின்றன. புரட்டாசி முதல் கார்த்திகை மாதம் வரை மாமரங்களும் சித்திரை, வைகாசியில் கடம்ப மரங்களும் பூக்கும். இதுபோல ஆண்டு முழுதும் தாவரங்கள் பூக்கும் வகையில் அயல்நாட்டு வகை தவிர வண்ணத்துப்பூச்சிக்கேற்ற தாவரங்களை வளர்க்க ஆரம்பித்தால் பூங்கா உருவாக்கலாம். பல்வேறு இயற்கை அமைப்புகளை கொண்ட மதுரை மாவட்டத்தில் வண்ணத்துப்பூச்சி பூங்கா அமைத்தால் சூழலியல், பல்லுயிரியம் குறித்து மாணவர்கள், பொது மக்கள் அறிந்து கொள்ள முடியும் என்றார்.