/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
காஸ் சிலிண்டரை திறந்து தெருவையே கதறவிட்ட பெண்
/
காஸ் சிலிண்டரை திறந்து தெருவையே கதறவிட்ட பெண்
ADDED : மே 24, 2025 03:43 AM
திருமங்கலம்: திருமங்கலத்தில் தாயுடன் ஏற்பட்ட பிரச்னையால் காஸ் சிலிண்டரை திறந்துவிட்ட பெண்ணால், தெரு முழுவதும் காஸ் பரவி பொதுமக்கள் பீதிக்கு உள்ளாகினர்.
திருமங்கலம் ஜவகர் நகர் 2-ம் தெருவை சேர்ந்தவர் சாந்தி. இவரது மகள் ஜனனி 23, இருவருக்கும் நேற்று முன்தினம் இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. மகளுடன் கோபித்துக் கொண்ட சாந்தி, வீட்டின் மாடியில் உள்ள அறைக்கு சென்று துாங்கிவிட்டார்.
தாய்மீது ஆத்திரமடைந்த மகள் ஜனனி, வீட்டுச் சமையல் அறையில் இருந்த காஸ் சிலிண்டரை திறந்து விட்டுவிட்டு, அறைக்குள் சென்று துாங்கி உள்ளார்.
சிலிண்டரில் இருந்து வெளியேறிய காஸ் காற்றில் பரவி தெரு முழுவதும் வியாபித்தது.
பக்கத்து வீடுகளில் உறக்கத்தில் இருந்த பலரும் காஸ் வாசனையால் விழித்து தெருவுக்கு வந்தனர். கலவரத்துடன் காரணம் தெரியாமல் தவித்தனர். ஆய்வு செய்ததில் சாந்தி வீட்டில் காஸ் கசிந்தது தெரிந்தது. உடனே அவசர போலீஸ் 100க்கு தெரிவித்தனர்.
போலீசார் வீட்டின் கதவை தட்டிய போது யாரும் எழுந்திருக்கவில்லை. மாடியில் துாங்கிய சாந்தியை எழுப்பி கதவை திறக்க முயன்ற போது அவராலும் இயலவில்லை. அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
துாங்கிக் கொண்டிருந்த ஜனனியை எழுப்பியதுடன், காஸ் சிலிண்டரையும் மூடினர். விசாரணைக்குப்பின் தாய், மகள் இருவரையும் கடுமையாக எச்சரித்து திரும்பினர். இந்த களேபரத்தால் இரவு 11:00 முதல் அதிகாலை 1:00 மணி வரை அச்சத்துடன் அத்தெருவாசிகள் துாக்கம் தொலைத்தனர்.