ADDED : அக் 31, 2024 02:41 AM
மதுரை: சேடபட்டி வட்டாரத்தில் நடப்பு பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட மக்காச்சோள பயிர்களில் படைப்புழு தாக்குதல் தென்படுவதால் மேலாண்மை தொழில்நுட்பங்களை கடைப்பிடிக்க வேண்டுமென வேளாண் உதவி இயக்குநர் ராமசாமி தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: இளம்பயிரில் படைப்புழுவின் இளம்நிலை தென்பட்டால் வேப்ப எண்ணெய் அல்லது அசாடிராக்டின் 1500 (பி.பி.எம்.) ஏக்கருக்கு ஒரு லிட்டர் அளவில் தெளிக்க வேண்டும். ஏக்கருக்கு 5 இனக்கவர்ச்சி பொறிகள் வைத்து தாய் அந்து பூச்சிகளை கவர்ந்து அழிக்க வேண்டும்.
ஏக்கருக்கு ஒரு கிலோ அளவில் மெட்டாரைசியம் அனிசோபிலியே (உயிர் கட்டுப்பாட்டுக் காரணி) கரைத்து தெளிக்கலாம். படைப்புழு வளர்ச்சியடைந்து சேதம் விளைவிக்கும் நிலையில் இருந்தால் ஏக்கருக்கு 100 கிராம் எமாமெக்டின் பென்சோயேட் அல்லது 300 மில்லி நவலுாரான் தெளித்து கட்டுப்படுத்த வேண்டும். ஒரே மருந்தை மறுபடியும் பயன்படுத்தக்கூடாது என்றார்.

