/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மேலவளவில் பெருங்கற்கால சின்னங்கள் வழிபாடு
/
மேலவளவில் பெருங்கற்கால சின்னங்கள் வழிபாடு
ADDED : ஜன 14, 2025 05:29 AM

மதுரை: மேலவளவு பகுதியில் பழமையான பெருங்கற்கால சின்னங்கள் இன்றும் வழிபாட்டில் இருப்பது ஆவணப்படுத்தப்பட்டது.
இங்கு சோமகிரிமலை குன்று, முறிமலை குன்றுக்கு இடையேயுள்ள பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது பறம்பு கண்மாய். அதன் கலுங்கு பகுதி அருகேயுள்ள பாறையில் 2 கல்வெட்டுகள் காணப்படுகின்றன.
பிற்கால பாண்டிய மன்னன் மாறவர்மன் சுந்தரபாண்டியன் பறம்பு கண்மாய் வெட்டி, அதற்கு கலுங்கு அமைத்து கொடுத்த செய்தியை 1238ம் ஆண்டு கல்வெட்டு தெரிவிக்கிறது.
1415 ல் விஜயநகர மன்னன் மல்லிகார்ச்சுனராயரின் மகன் விருப்பாச்சிராயரின் கல்வெட்டில் திருநாராயண சம்பான் என்பவர் கண்மாய் பராமரிப்புக்காக கொடுத்த காணிக்கை பற்றி குறிப்பிடுகிறது. இவ்வூரின் பெயர் திருநாராயண மங்கலம் என்றும் கல்வெட்டு குறிப்பிடுகிறது என்கிறார் மதுரை இயற்கை பண்பாட்டு அறக்கட்டளை உறுப்பினர் தமிழ்தாசன்.
அவர் கூறியது: சோமகிரி மலையடிவாரத்தில் உள்ள நாவல் மரத்தின் அடியில் 14ம் நுாற்றாண்டு சுல்தான் காசு ஒன்று கிடைத்துள்ளது. மலையின் உச்சியில் 200 முதல் 300 ஆண்டுகள் பழமையான கோட்டைச் சுவர்கள், கோயில் மண்டபங்கள் காணப்படுகின்றன. சில ஆண்டுகள் முன்பு வரை மலை உச்சியில் முருகன் கோயில் இருந்துள்ளது.
கோயிலில் இருந்த முருகன் வெண்கலச் சிலை பலமுறை காணாமல் போய் மீட்கப்பட்டுள்ளது. 3000 ஆண்டுகள் பழமையான பெருங்கற்கால சின்னங்கள், 13, 15 ம் நுாற்றாண்டு கல்வெட்டு, 14 ம் நுாற்றாண்டு சுல்தான் நாணயம், பழமையான கோட்டை என தொடர்ச்சியான வரலாற்று சான்றுகள் கிடைத்துள்ளதால் இந்த பகுதியில் தமிழக அரசு அகழாய்வு மேற்கொள்ள வேண்டும் என்றார்.

