/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இருக்கு... ஆனா இல்லை... வாடகைக்கு விடப்படும் வேளாண் இயந்திரங்கள் தேவைப்படும் நேரத்தில் கிடைப்பதில்லை என புகார்
/
இருக்கு... ஆனா இல்லை... வாடகைக்கு விடப்படும் வேளாண் இயந்திரங்கள் தேவைப்படும் நேரத்தில் கிடைப்பதில்லை என புகார்
இருக்கு... ஆனா இல்லை... வாடகைக்கு விடப்படும் வேளாண் இயந்திரங்கள் தேவைப்படும் நேரத்தில் கிடைப்பதில்லை என புகார்
இருக்கு... ஆனா இல்லை... வாடகைக்கு விடப்படும் வேளாண் இயந்திரங்கள் தேவைப்படும் நேரத்தில் கிடைப்பதில்லை என புகார்
ADDED : ஜூன் 19, 2025 02:49 AM

மதுரை: மதுரையில் வேளாண் பொறியியல் துறை மூலம் வாடகைக்கு விடப்படும் டிராக்டர், நெல் அறுவடை இயந்திரங்கள் பற்றாக்குறையால் உழவுப்பணிகளும் அறுவடை பணிகளும் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
கோடை கால குறுவை சாகுபடியில் 10 ஆயிரம் எக்டேர், ஜூன், ஜூலையில் இருபோகத்திற்கான முதல்போக சாகுபடியில் 30 ஆயிரம் ஏக்கர், அதே அளவு இரண்டாம் போக சாகுபடி, செப்டம்பரில் ஒரு போகத்திற்கான ஒரு லட்சம் ஏக்கர் சாகுபடி என மாவட்டத்தில் நெல் பிரதான பயிராக விவசாயிகள் பயிரிடுகின்றனர். வேளாண் பொறியியல் துறை சார்பில் வட்டாரத்திற்கு ஒன்று வீதம் 13 வட்டாரங்களில் டிராக்டர்கள், அதற்கான இணைப்பு கருவிகள், அறுவடை நேரத்தில் நெல் அறுவடை இயந்திரம் மணிக்கணக்கில் கட்டண அடிப்படையில் வாடகைக்கு விடப்படுகிறது. ஆனால் தேவைப்படும் நேரத்தில் கருவிகள் கிடைப்பதில்லை என்கின்றனர் விவசாயிகள்.
அவர்கள் கூறியதாவது: வேளாண் பொறியியல் துறை மூலம் மணிக்கு ரூ.500 கட்டணத்தில் டிராக்டர், டயர் அறுவடை கருவி மூலம் மணிக்கு ரூ.1160, மழை பெய்து ஈரமான தரையில் பெல்ட் இயந்திரம் மூலம் அறுவடை செய்ய ரூ.1890 கட்டணம் வசூலிக்கின்றனர். உழவன் செயலியில் பதிவு செய்ய சொல்கின்றனர். ஆனால் எங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் கருவிகள் கிடைப்பதில்லை. உழவோ, அறுவடை பணியோ தாமதமாகக்கூடாது என தனியாரிடம் இரு மடங்கு கூடுதல் வாடகைக்கு கருவிகளை வாங்குகிறோம். 4 அறுவடை இயந்திரங்களில் இரண்டு பழுதடைந்துள்ளதால் அவசரத்திற்கு கிடைப்பதில்லை. முன்பு போல அலைபேசி மூலமோ அல்லது வேளாண் பொறியியல் அலுவலகத்தில் பதிவு செய்தோ கருவிகளை பெற அனுமதிக்க வேண்டும் என்றனர்.
துறை அதிகாரிகள் கூறியதாவது: எல்லாமே 'ஆன்லைன்' முறையில் வந்து விட்டதால் உழவன் செயலி மூலமே கருவிகளை வாடகைக்கு பெற விண்ணப்பிக்க வேண்டும். ஒவ்வொரு வட்டாரத்திலும் சராசரியாக மாதம் 150 மணி நேரம் டிராக்டர் ஓட்ட வேண்டும். ஆனால் எங்களுக்கு அந்தளவுக்கு விவசாயிகள் பதிவு செய்வதில்லை.
தேவைப்பட்டால் பிற மாவட்டங்களில் இருந்தும் டிராக்டர், அறுவடை இயந்திரங்களை அழைத்து வாடகைக்கு விடுகிறோம். செயலியில் பதிவு செய்தால் கட்டணத்தை முன்கூட்டியே செலுத்த வேண்டும் என்பதாலும் பதிவு செய்வோர் குறைவு. பழுதடைந்த அறுவடை இயந்திரத்திற்கு பதிலாக பிற பகுதிகளில் இருந்தும் வரவழைத்து விவசாயிகளுக்கு உதவுகிறோம் என்றனர்.
உழவன் செயலி மூலம் விவசாயிகள் பதிவு செய்வதில் என்ன பிரச்னை என்பதை கண்டறிந்து வாடகைக்கு விடுவதை தாமதமின்றி செயல்படுத்த வேளாண் துறையுடன் வேளாண் பொறியியல் துறை இணைந்து ஏற்பாடு செய்யவேண்டும்.
இவ்வாறு கூறினர்.