/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
தீபாவளியை 'ஸ்வீட்' ஆக கொண்டாடி இருப்பீர்களே... '‛தங்கம் போல' சர்க்கரை அளவு ஏறியதை தடுப்பது எப்படி
/
தீபாவளியை 'ஸ்வீட்' ஆக கொண்டாடி இருப்பீர்களே... '‛தங்கம் போல' சர்க்கரை அளவு ஏறியதை தடுப்பது எப்படி
தீபாவளியை 'ஸ்வீட்' ஆக கொண்டாடி இருப்பீர்களே... '‛தங்கம் போல' சர்க்கரை அளவு ஏறியதை தடுப்பது எப்படி
தீபாவளியை 'ஸ்வீட்' ஆக கொண்டாடி இருப்பீர்களே... '‛தங்கம் போல' சர்க்கரை அளவு ஏறியதை தடுப்பது எப்படி
ADDED : அக் 21, 2025 05:06 AM

மதுரை: குடும்பத்துடன் குதுாகலமாக பட்டாசு வெடித்தும், இனிப்புகளை 'நான் ஸ்டாப்' ஆக சாப்பிட்டும் தீபாவளியை ஆரவாரமாக நேற்று கொண்டாடி இருப்பீர்கள். சர்க்கரை நோய் உள்ளவர்கள் 'நல்ல நாளும் அதுமா கொஞ்சுண்டுகூட 'ஸ்வீட்' சாப்பிட கூடாதா' என செல்லமாய் கோபித்துக்கொள்ள, அவர்களுக்கு 'ஸ்வீட்' கொடுத்து சமரசம் செய்த நிகழ்வு பெரும்பாலான வீடுகளில் நடந்திருக்கும்.
ஆசை தீர இனிப்புகளை ஒரு கை பார்த்தாகிவிட்டது. ஆனால் நம் உடல்.... உறுப்புகளை ஒரு கை பார்த்துவிடுமே. 'கவலை வேண்டாம். சில சுலபமான உடற்பயிற்சிகள், உணவு கட்டுப்பாடுகள் மூலம் உடல்நலத்தை பாதுகாக்கலாம்' என்கிறார் இந்தியன் அசோசியேஷன் ஆப் பிசியோதெரபிஸ்ட்ஸ், தமிழ்நாடு கிளை தலைவர் மருத்துவர் வெ. கிருஷ்ணகுமார்.
அவர் கூறியதாவது: உணவுக்குப் பிறகு நீண்ட நேரம் உட்கார்ந்திருக்க வேண்டாம். இதனால் தசைகள் இன்சுலின் தாக்கத்திற்கு குறைவாக எதிர்வினை புரியும். இது ரத்தசர்க்கரை அளவை அதிகரிக்கும். 10-15 நிமிடங்கள் மெதுவாக நடந்தால், சாப்பிட்ட உணவு உடலில் மெதுவாக ஜீரணமாகி, இன்சுலின் செயல்பாடு மேம்பட்டு, ரத்தச் சர்க்கரை உயர்வதை தடுக்கும்.
சிறிய இடைவெளிகளில் அதாவது மிதமான உணவு கொண்டிருந்தால் 15 நிமிடங்களுக்கு பிறகு, அதிகளவு உணவு உட்கொண்டிருந்தால், 30- - 60 நிமிடங்களுக்கு பிறகு நடைபயிற்சி செய்யுங்கள்.
நீண்ட நடைபயிற்சி செய்ய இயலாதவர்கள், ஒவ்வொரு உணவிற்குப் பிறகும் 5-10 நிமிடங்கள் நடைபயிற்சி செய்தாலும் போதுமான பலன் கிடைக்கும். சாப்பாட்டுக்கு பிறகு எளிய இயக்கங்கள் செய்யலாம். ஒரே இடத்தில் மெதுவாக ஜாக்கிங் செய்யலாம். உடல் எடையை பயன்படுத்தி ஸ்குவாட் (உட்கார்ந்து எழுதல்) செய்யலாம்.
நாற்காலி இருப்பது போல் கற்பனை செய்து அதில் உட்கார்ந்து மீண்டும் எழுவது போன்று செய்யலாம். இது தசை செயல்பாட்டை அதிகரிக்கும். நார்ச்சத்து உணவுகள் சாப்பிடுங்கள். புரதங்கள் சேர்ப்பதும் நலமே.
வயதானவர்கள் உட்கார்ந்த நிலையில் சில பயிற்சிகளை செய்யலாம். 'டிவி' பார்க்கும் போது, இரு கால்களையும் மாறி மாறி மேலே துாக்கி ராணுவவீரர் நடை போல் செய்யலாம்.
பாதங்களை தரையில் வைத்து, விரல்களை மட்டும் மேலே துாக்கி, பின்னர் இறக்கவும். முன்னங்கால்களை நேராக மேலே துாக்கி, மெதுவாக இறக்கவும். நின்று கொண்டு கணுக்கால்களை மட்டும் துாக்கி இறக்கும் பயிற்சி செய்யலாம்.
மூச்சு பயிற்சி மூச்சை உள்ளிழுத்தவாறே கைகளை மேலே உயர்த்த வேண்டும். கீழே இறக்கும் போது மெதுவாக மூச்சுக்காற்றை வெளியேற்றவும். இது பாராசிம்பத்தடிக் நரம்பு செயல்பாட்டை துாண்டும். மனஅழுத்தம் குறைந்து, இன்சுலின் உணர்திறன் மேம்படும். இசையுடன் கைகளை தட்டி ஆடுவது போல் உடலை அசையுங்கள். இது மிதமான கார்டியோ பயிற்சியாக செயல்படும். இதய ஆரோக்கியத்திற்கும், செரிமானத்திற்கும் நல்லது. தண்ணீரை சிறிது சிறிதாக குடிக்கவும். ஏனெனில் நீர்ச்சத்து குறைவால் ரத்தச் சர்க்கரை அளவு அதிகரிக்கலாம். தண்ணீர் குடிப்பது ஜீரணத்தையும், ரத்தசர்க்கரை அளவில் சமநிலையையும் காக்கும். இதன்மூலம் எந்நாளும் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம், என்றார்.