/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
இறந்ததாக கருதியவர் உயிருடன் வந்ததால் பரபரப்பு
/
இறந்ததாக கருதியவர் உயிருடன் வந்ததால் பரபரப்பு
ADDED : ஜன 05, 2025 12:53 AM

மயிலாடுதுறை:மயிலாடுதுறை அருகே ஆற்றில் மூழ்கி இறந்ததாக கருதப்பட்டவர் உயிருடன் திரும்பி வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அடுத்த மருதுார் லட்சுமி நாராயணபுரத்தை சேர்ந்தவர் செல்வராஜ், 62; கூலி தொழிலாளி. இவருக்கு சாந்தி என்ற மனைவி, 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
தற்போது செல்வராஜ் குடும்பத்துடன் திருவாரூர் மாவட்டம் மாந்தை பகுதியில் வசித்து வந்தார். கடந்த மாதம் சொந்த ஊருக்கு வந்தவர் 21ம் தேதி இரவு முதல் காணவில்லை.
இதுகுறித்து அவரது மனைவி சாந்தி செம்பனார்கோவில் போலீசில் புகார் அளித்தார். இந்நிலையில், கடந்த 22ம் தேதி காலை மேலபாதி காவிரி ஆற்றில் ஆண் ஒருவர் இறந்து கிடந்தார்.
தகவலறிந்த செம்பனார் கோவில் போலீசார், ஆற்றில் அழுகிய நிலையில் கிடந்த உடலை கைப்பற்றி மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனை முடிந்த நிலையில் இறந்தவர் செல்வராஜ் என கூறிய போலீசார், உடலை அவரது குடும்பத்தினர் ஒப்படைத்தனர்.
செல்வராஜ் மனைவி சாந்தி ஏற்க மறுத்த போதிலும் போலீசார் சொன்னதை நம்பி உடலை உறவினர்கள் எடுத்துச் சென்று இறுதி சடங்குகளுக்கு பின் உடல் தகனம் செய்துள்ளனர்.
இந்நிலையில் ஈரோட்டிற்குச் சென்றிருந்த செல்வராஜ் வேலை கிடைக்காததால் அங்கு சில நாட்கள் தங்கி விட்டு நேற்று முன்தினம் ஊருக்கு திரும்பியுள்ளார். அவரைக் கண்ட உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தகவலறிந்த செம்பனார்கோவில் போலீசார் செல்வராஜ் திரும்பி வந்ததால் இறந்தவர் யார்? உடல் தகனம் செய்யப்பட்டு விட்ட நிலையில் அவரது உறவினர்கள் கேட்டால் என்ன செய்வது என தெரியாமல் தவித்து நிற்கின்றனர்.
போலீசரின் அலட்சியத்தால் நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.