/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
பிரச்னையை எதிர்கொள்வேன் டி.எஸ்.பி., சுந்தரேசன் சவால்
/
பிரச்னையை எதிர்கொள்வேன் டி.எஸ்.பி., சுந்தரேசன் சவால்
பிரச்னையை எதிர்கொள்வேன் டி.எஸ்.பி., சுந்தரேசன் சவால்
பிரச்னையை எதிர்கொள்வேன் டி.எஸ்.பி., சுந்தரேசன் சவால்
ADDED : ஜூலை 20, 2025 03:22 AM

மயிலாடுதுறை:உயர் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு கூறிய மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்க பிரிவு டி.எஸ்.பி.,யாக இருந்த சுந்தரேசன், தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு பிரிவு டி.எஸ்.பி.,யாக இருந்த சுந்தரேசன், தன் அரசு வாகனம் மாற்றப்பட்ட சர்ச்சை தொடர்பாக, உயர் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு தெரிவித்தார்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தஞ்சை டி.ஐ.ஜி., ஜியாவுல் ஹக் நேற்று முன்தினம் மயிலாடுதுறை எஸ்.பி., அலுவலகத்தில் விசாரணை நடத்தினார்.
டி.எஸ்.பி., சுந்தரேசன் மீது ஒழுங்கு நடவடிக்கையாக, அவரை சஸ்பெண்ட் செய்ய திருச்சி மண்டல ஐ.ஜி., ஜோஷி நிர்மல் குமாருக்கு பரிந்துரை செய்ததாக போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது. இதனிடையே, சுந்தரேசன் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் சமூக வலைதளங்களில் பரவியது.
இந்நிலையில், நேற்று காலை செய்தியாளர்களை சந்தித்த சுந்தரேசன் கூறியதாவது:
கடந்த காலங்களில் நான் தவறு செய்திருந்தால் என்னை சஸ்பெண்ட் செய்திருக்க வேண்டும். டிரான்ஸ்பர் மட்டுமே செய்தனர்.
ஒருவரை பிடிக்கவில்லை என்றால், கை பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம். இது தான் காவலர்களின் நிலை.
இந்த பிரச்னையில் டி.ஐ.ஜி., என்னை விசாரிக்காமல் எப்படி சஸ்பெண்ட் செய்ய பரிந்துரை செய்யலாம். நான் அனைத்துக்கும் தயாராக உள்ளேன். என் தந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இது குறித்த மெசேஜை எஸ்.பி.,க்கு அனுப்பி உள்ளேன். ஆனால், அவர் பதில் அளிக்கவில்லை. நான் மிகுந்த மன அழுத்தத்தில் உள்ளேன்.
என் உயிருக்கு ஆபத்து உள்ளது. எனக்கு பாதுகாப்பு வேண்டும். என் மீது சேற்றை வாரி அடிக்கின்றனர்.
என் மீது தவறு இருந்தால் துாக்கில் போடவும். நான் கடைசி வரை பிரச்னையை எதிர்கொள்வேன். மற்றவர்களை போன்று தவறான முடிவு எடுக்க மாட்டேன்.
மாநில மற்றும் தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து என் பிரச்னை குறித்து விசாரணை நடத்த வேண்டும். தமிழக முதல்வர் இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.