ADDED : அக் 27, 2024 04:21 PM
மயிலாடுதுறை அருகே குண்டும் குழியுமான சாலையில் சென்ற டூவீலர் சரிந்து விழுந்த போது எதிரே வந்த பஸ் மோதியதில் போலீஸ் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா எடக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் மகன் பரந்தாமன்.35. முதல் நிலைக் காவலர். எஸ்.பி., அலுவலக உணவகத்தில் பணியாற்றி வருகிறார். இன்று மதியம் பரந்தாமன் உணவு அருந்த வீட்டிற்கு தனது டூவீலரில் ஹெல்மெட் அணிந்தபடி சென்றுள்ளார். சுந்தரப்பன்சாவடி என்ற இடத்தில் விரிவாக்க பணிக்காக தோண்டப்பட்டு குண்டும் குழியுமாக, சாலையில் சென்றபோது டூவீலர் கருங்கல் ஜல்லியில் சறுக்கியதில் நிலைதடுமாறி பரந்தாமன் சாலையில் விழுந்துள்ளார்.
அப்போது எதிரே திருவாரூரில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற அரசு பஸ் பரந்தாமன் மீது மோதியது. இதில் பரந்தாமன் இடுப்பு பகுதி முற்றிலுமாக நொறுங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். தகவல் அறிந்த பெரம்பூர் போலீசார் விரைந்து வந்து பரந்தாமனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, அரசு பஸ் டிரைவரை தேடி வருகின்றனர்.