/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
சீருடையில் அலுவலகத்திற்கு நடந்து சென்ற டி.எஸ்.பி., அதிகாரிகள் பழிவாங்குவதாக பகிரங்க குற்றச்சாட்டு
/
சீருடையில் அலுவலகத்திற்கு நடந்து சென்ற டி.எஸ்.பி., அதிகாரிகள் பழிவாங்குவதாக பகிரங்க குற்றச்சாட்டு
சீருடையில் அலுவலகத்திற்கு நடந்து சென்ற டி.எஸ்.பி., அதிகாரிகள் பழிவாங்குவதாக பகிரங்க குற்றச்சாட்டு
சீருடையில் அலுவலகத்திற்கு நடந்து சென்ற டி.எஸ்.பி., அதிகாரிகள் பழிவாங்குவதாக பகிரங்க குற்றச்சாட்டு
ADDED : ஜூலை 18, 2025 02:23 AM

மயிலாடுதுறை:மயிலாடுதுறை மதுவிலக்கு டி.எஸ்.பி., வாகனம் இல்லாமல் சீருடையில் அலுவலகத்திற்கு, வீட்டிலிருந்து நடந்தே சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு டி.எஸ்.பி.,யாக சுந்தரேசன், கடந்த நவம்பர் முதல் பணியாற்றி வருகிறார். அதற்கு முன், மனித உரிமை ஆணைய டி.எஸ்.பி.,யாக பணியாற்றியபோது அரசுக்கு எதிராக செயல்பட்டதாக, பணியிட மாற்றம் செய்யப்பட்டார் என கூறப்படுகிறது.
இந்நிலையில், மயிலாடுதுறையில் சுந்தரேசன் பொறுப்பேற்றது முதல் காரைக்கால் மாவட்டத்தில் இருந்து மது பாட்டில்கள் கடத்தல், சட்டவிரோத மது விற்பனை, அனுமதியின்றி இயங்கிய டாஸ்மாக் பார்களை கண்டறிந்து சீல் வைக்க நடவடிக்கை எடுத்தார்.
மது பாட்டில் கடத்தல் தொடர்பாக 1,200 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 700 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளார். சாராய விற்பனையில் ஈடுபட்ட 5 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுத்தார்.
இதனால் மயிலாடுதுறை மாவட்டத்தில் சாராய விற்பனை மற்றும் சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்டவர்கள் பாதித்ததுடன், போலீசருக்கும் மாமுல் குறைந்து போனது.
இந்நிலையில் டி.எஸ்.பி., சுந்தரேசன் நேற்று காலை தன் வீட்டில் இருந்து சீருடையில் அலுவலகத்திற்கு சாலையில் நடந்து சென்றார். காரணம், அமைச்சர் மெய்யநாதன் பாதுகாப்புக்காக சுந்தரேசன் பயன்படுத்திய வாகனம் எடுத்துக்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டது.
மேலும், அதற்கு பதில் வழங்கப்பட்ட பழைய வாகனத்தையும் பயன்படுத்த முடியாத நிலையில் டி.எஸ்.பி., சுந்தரேசன் நேற்று நடந்து அலுவலகத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது.
ஆனால், இதை மயிலாடுதுறை எஸ்.பி., அலுவலகம் மறுத்துள்ளது.
இந்நிலையில், நேற்று மாலை டி.எஸ்.பி., சுந்தரேசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சட்டம் - ஒழுங்கு கூடுதல் ஏ.டி.ஜி.பி., டேவிட்சன் ஆசீர்வாதம் மற்றும் உளவுத்துறை ஐ.ஜி., செந்தில்வேல் ஆகியோர் துாண்டுதலின் படி, மயிலாடுதுறை எஸ்.பி., ஸ்டாலின் மனரீதியாக என்னை 'டார்ச்சர்' செய்கிறார்.
எனக்கு நான்கு மாதமாக சம்பளம் வழங்கவில்லை. விருப்ப ஓய்வு பெற விண்ணப்பித்து இருந்தேன். ஆனால், நான் ஓய்வூதியம் பெறக் கூடாது என்பதற்காக, சஸ்பெண்ட் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
நான் லஞ்சம் வாங்கியது நிரூபிக்கப்பட்டால் அலுவலக வாயிலிலேயே துாக்கில் தொங்கவும் தயார். எனது உயிர் முக்கியம் இல்லை. ஆனால், எனது குடும்பத்திற்கு எனது உயிர் முக்கியம்.
அதிகாரிகளுக்கு லஞ்சம், ஊழல் வசூல் செய்து கொடுக்காத நேர்மையான காவல் துறையினர் பழிவாங்கப்படுகின்றனர். நான் தன்னிச்சையாக பேட்டி அளித்தால் ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் சஸ்பெண்ட் செய்யப்படுவேன் என்று தெரிந்தும், இந்த பேட்டியை அளிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
எஸ்.பி., மறுப்பு
செய்தியாளர்களை சந்தித்த மயிலாடுதுறை எஸ்.பி., ஸ்டாலின், ''டி.எஸ்.பி., சுந்தரேசனின் வாகனம் பெறப்பட்டதில் முறையான நடவடிக்கைகள் கையாளப்பட்டன.
''அவர் மீது என்ன விதமான ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பது விசாரணைக்கு பிறகே தெரியவரும். லஞ்சம், ஊழல் எதுவும் மயிலாடுதுறை மாவட்டத்தில் இல்லை. அவர் தவறான தகவலை தெரிவிக்கிறார்,'' என்றார்.

