/
உள்ளூர் செய்திகள்
/
மயிலாடுதுறை
/
பச்சைப்பயிறு, உளுந்து பயிர்களில் மஞ்சள் தேமல் நோய் தாக்குதல்
/
பச்சைப்பயிறு, உளுந்து பயிர்களில் மஞ்சள் தேமல் நோய் தாக்குதல்
பச்சைப்பயிறு, உளுந்து பயிர்களில் மஞ்சள் தேமல் நோய் தாக்குதல்
பச்சைப்பயிறு, உளுந்து பயிர்களில் மஞ்சள் தேமல் நோய் தாக்குதல்
ADDED : மார் 27, 2025 03:10 AM

மயிலாடுதுறை:பச்சைப்பயிறு மற்றும் உளுந்து பயிர்களை மஞ்சள் தேமல் நோய் தாக்குதலால் மகசூல் பாதிக்கும் என மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த ஆண்டு 48 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பச்சைப்பயிறு, உளுந்து சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 60 முதல் 70 நாள் பயிர்களான பச்சைப்பயிறு மற்றும் உளுந்து செடிகள் தற்போது நிலவும் வெயில், பனிப்பொழிவு மற்றும் காலம் தாழ்ந்த சாகுபடி ஆகியவற்றால் மஞ்சள் தேமல் நோய் தொற்றுக்கு ஆளாகி வெள்ளை ஈ தாக்குதல் பரவி வருகிறது.
டெல்டா மாவட்டங்களில் மஞ்சள் தேமல் நோய்த் தொற்று அதிகரித்து உள்ள நிலையில் தற்போது மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது.
மஞ்சள் தேமல் நோய் தொற்றால் பச்சைப்பயிறு மற்றும் உளுந்து செடிகளின் இலைகள் மஞ்சள் நிறமாக மாறி, பின்னர் சிறியதாகி செடிகள் முழுவதுமாக பாதிக்கப்படுகின்றன. வெள்ளை ஈ பாதிக்கப்பட்ட செடியில் இருந்து மற்ற செடிகளுக்கு செல்லும் போது நோய் விரைவாக பரவுகிறது. இதனால் பெரும் அளவில் மகசூல் பாதிக்கப்பட்டு நஷ்டம் ஏற்படும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். வேளாண் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து பயிறு, உளுந்து செடிகளை காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
அதனையடுத்து வேளாண் இணை இயக்குனர் சேகர் தலைமையில் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட வயல்களில் செடிகளை பார்வையிட்டதுடன், நிபுணர்களைக் கொண்டு ஆய்வு நடத்தினர். மஞ்சள் தேமல் நோய் பரவிய பச்சைப்பயிறு, உளுந்து செடிகளை காக்க தெளிக்க வேண்டிய மருந்துகள் குறித்து அறிவுறுத்தினர்.