/
உள்ளூர் செய்திகள்
/
நாகப்பட்டினம்
/
கூலிப்படையை வைத்து தாயை கொலை செய்த டாக்டர் கைது
/
கூலிப்படையை வைத்து தாயை கொலை செய்த டாக்டர் கைது
ADDED : ஏப் 28, 2024 02:06 AM
நாகப்பட்டினம்: மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேட்டை சேர்ந்தவர் சண்முகம் மனைவி ஜானகி, 70, ஓய்வுபெற்ற ஆசிரியரான இவர், கணவரை இழந்த நிலையில் தனியாக வசித்து வந்தார். இவரது மகன் பாரிராஜன். பூம்புகார் அரசு மருத்துவமனையில் சித்தா டாக்டராக பணியாற்றி வருகிறார். மணல்மேட்டில் தாய் வீட்டின் அருகிலேயே தனியாக தன் குடும்பத்தினருடன் வசிக்கிறார்.
இவர், 2020ம் ஆண்டு வெளியூர் செல்வதற்காக, தன் டிரைவர் ஜான்சனிடம் தாய் வீட்டில் உள்ள காரை எடுத்து வருமாறு கூறினார். அதன்படி ஜான்சன் சென்றபோது கதவு மூடியிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது ஜானகி கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் கழுத்தில் அணிந்திருந்த 8 சவரன் செயின் திருடு போயிருந்தது.
பாரிராஜன் அளித்த புகாரின் படி, மணல்மேடு போலீசார், வழக்கு பதிந்து விசாரணை நடத்தியதில், நகைக்காக கொலை நடந்தது தெரிய வந்தது.
அதில் திருப்தியடையாத ஜானகியின் இரண்டாவது மகன் ராஜா, சி.பி.சி.ஐ.டி., விசாரணை கோரி, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். கோர்ட் உத்தரவின்படி, கடந்தாண்டு நாகை மாவட்ட சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.
அதில், குடும்ப தகராறில் பாரிராஜன், 51, கூலிப்படையை வைத்து தாய் ஜானகியை கொலை செய்தது தெரிந்தது. பாரிராஜனை போலீசார் கைது செய்து, கொலையில் தொடர்புடையவர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.

