/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பால் விலையை உயர்த்தி வழங்க வேண்டுகோள்
/
பால் விலையை உயர்த்தி வழங்க வேண்டுகோள்
ADDED : மார் 08, 2025 01:24 AM
நாமக்கல்:தமிழக விவசாய சங்கங்களின், இரண்டாவது ஒருங்கிணைப்புக்குழு கூட்டம், நாமக்கல்லில் நேற்று நடந்தது. உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின், தமிழக விவசாயிகள் சங்க தலைவர் வேலுசாமி தலைமை வகித்தார்.
தமிழக விவசாயிகள் சங்க கட்சி சார்பற்ற மாநில தலைவர் சண்முகம், கே.எம்.எம்., அமைப்பின், தமிழக ஒருங்கிணைப்பு தலைவர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், தமிழக விவசாயிகளின் விளை நிலங்களில் உள்ள தென்னை, பனை மரத்தில் இருந்து இறக்கும் கள்ளுக்கு உண்டான தடையை தமிழக அரசு நீக்க வேண்டும்.
நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் உற்பத்தி செய்த விளைபொருட்களுக்கு, கட்டுப்படியான குறைந்தபட்ச ஆதார விலை, எம்.எஸ்.பி.,யை நிர்ணயம் செய்யக்கோரி, வடமாநில விவசாய சங்கங்களின் போராட்டத்திற்கு, தமிழகத்தில் உள்ள விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு முழு ஒத்துழைப்பு அளிக்கிறது.
தமிழக அரசு கூட்டுறவு, ஆவின் ஒன்றியம் மூலம் வாங்கப்படும் பசும் பால், எருமைப்பால், தற்போது கொள்முதல் செய்யப்படும் விலையில் இருந்து லிட்டர் ஒன்றுக்கு, 15 ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டும். கர்நாடகா அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட திட்டமிட்டுள்ளது.
இத்திட்டத்தை உடனடியாக நிறைவேற்றக்கோரி, அங்குள்ள கன்னட அமைப்புகள் வரும், 11ல், தமிழக எல்லைப்பகுதியில் முற்றுகை போராட்டம் அறிவித்துள்ளன. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், கடலுார் மாவட்டம், நெய்வேலி அனல்மின் நிலையத்தில் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை, ஒரு யூனிட் கூட கர்நாடகாவிற்கு வழங்காமல், அம்மாநிலத்தை இருளில் மூழ்கடிக்கும் வகையில், வரும், 31 காலை, 11:00 மணிக்கு, நெய்வேலி அனல்மின் நிலையம் முற்றுகை போராட்டத்தை, விவசாய சங்க அமைப்புகள் ஒன்று திரட்டி நடத்தப்படும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.