/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
முள்ளுக்குறிச்சி அருகே மயான சாலை சீரமைப்பு
/
முள்ளுக்குறிச்சி அருகே மயான சாலை சீரமைப்பு
ADDED : செப் 07, 2024 07:50 AM
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை, முள்ளுக்குறிச்சி அருகே, மலையாளப்பட்டி கிராமம் உள்ளது. இங்கு, 150க்கும் மேற்பட்ட மலைவாழ் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பாத்தியப்பட்ட மயானம், முள்ளுக்குறிச்சி பிரதான சாலையில் இருந்து, ஒரு கிலோ மீட்டர் துாரத்தில் உள்ளது. இந்த சாலையில், முள்ளுக்குறிச்சி பகுதி யில் இருந்து வரும் சாக்கடை நீர் செல்கிறது. இதனால், மயானத்திற்கு செல்பவர்கள் சாக்கடையில் நடந்து தான் செல்ல வேண்டியிருந்தது.
கடந்த, 30ல் மலையாளப்பட்டியை சேர்ந்த சின்னமுத்து மனைவி சின்னக்காளி, 75, இறந்துவிட்டார். இவரது சடலத்தை வண்டியில் வைத்து உறவினர்கள் தள்ளிச்சென்றனர். சாக்கடை நீர் மற்றும் இரண்டு நாட்களாக பெய்த மழையால், சாலை முழுதும் தேங்கி நின்றது. இதனால், சடலத்தை எடுத்து செல்ல முடியாமல் உறவினர்கள் தவித்தனர். பெரிய சிரமத்திற்கு நடுவே சடலத்தை மயானத்திற்கு கொண்டு சென்றனர்.
இதுகுறித்து, கடந்த, 31ல் நமது நாளிதழில் செய்தி வெளியானது. இந்நிலையில் நேற்று சாலையை சீரமைக்கும் பணி தொடங்கியது. சாக்கடை வரும் வழியை மாற்றிவிட்டனர். மேலும், சாலையில் கிராவல் மண் கொட்டி சமன்படுத்தினர். இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.