/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல் வாரச்சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடு விற்பனை
/
நாமக்கல் வாரச்சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடு விற்பனை
ADDED : மார் 30, 2025 01:28 AM
நாமக்கல்:ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, நாமக்கல் வாரச்சந்தையில், இரண்டு கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
நாமக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகே, சனிக்கிழமைதோறும் ஆட்டுச்சந்தை கூடுகிறது. இந்த சந்தைக்கு, நாமக்கல், புதன்சந்தை, சேந்தமங்கலம், ராசிபுரம், மோகனுார், எருமப்பட்டி, வளையப்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்களும், விவசாயிகளும், தாங்கள் வளர்க்கும் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். ரம்ஜான் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, வழக்கத்திற்கு மாறாக அதிகளவில் ஆடுகள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டன. அதிகாலை, 4:00 மணி முதல் ஆடு விற்பனை சூடுபிடித்தது.
இந்த ஆடுகள், எடைக்கு தகுந்தபடி விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு ஆடு, 4,000 முதல், அதிகபட்சம், 17,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், ஆட்டு குட்டியும், 400 முதல், 1,500 ரூபாய் வரை விற்பனையானது. பொதுமக்கள், வியாபாரிகள் போட்டி போட்டு ஆடுகளை வாங்கி சென்றனர். ஒரே நாளில், இரண்டு கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானது. அதனால், வியாபாரிகள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

