/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கள்ளச்சாராய சாவுக்கு பொறுப்பேற்று முதல்வர் பதவி விலக கோரி அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
/
கள்ளச்சாராய சாவுக்கு பொறுப்பேற்று முதல்வர் பதவி விலக கோரி அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
கள்ளச்சாராய சாவுக்கு பொறுப்பேற்று முதல்வர் பதவி விலக கோரி அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
கள்ளச்சாராய சாவுக்கு பொறுப்பேற்று முதல்வர் பதவி விலக கோரி அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 25, 2024 02:41 AM
ராசிபுரம்: 'கள்ளச்சாராய சாவுக்கு பொறுப்பேற்று, தமிழக முதல்வர் பதவி விலக வேண்டும்' என, அ.தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவிற்கு பொறுப்பேற்று, முதல்வர் ஸ்டாலின் பதவி விலக கோரி, ராசிபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பஸ் ஸ்டாண்ட் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா, நகர செயலாளர் பாலசுப்ரமணி, வர்த்தக அணி நிர்வாகி தமிழ்மணி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில், கள்ளச்சாராயத்தை தடுக்காத தமிழக அரசை கண்டித்தும், முதல்வரை பதவி விலக கோரியும் கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறியதாவது: 'கள்ளச்சாராயம் ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறது' என, எங்களுடைய பொதுச்செயலாளர் பலமுறை சட்டசபையிலும், அறிக்கை வாயிலாகவும் தெரிவித்துள்ளார். பல்வேறு போராட்டமும் நடத்தி உள்ளார். இதை தமிழக அரசு கண்டு கொள்ளாததால், 57 பேர் உயிர் பறி போயிருக்கிறது.
கள்ளக்குறிச்சி சம்பவத்தில் அதிகாரிகள் மட்டும் தான் பாதிக்கப்பட்டுள்ளனர். தி.மு.க.,வினர் எவரும் பாதிக்கப்படவில்லை. கள்ளக்குறிச்சியுடன், கள்ளச்சாராய சாவுக்கு முதல்வர் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களுக்கு, 10 லட்சம் ரூபாய் கொடுக்கின்றனர். இதை நாங்கள் வேண்டாம் என்று கூறவில்லை. அதேபோல், பட்டாசு ஆலையில் கடுமையாக உழைத்து அங்கே விபத்தில் இறப்பவர்களுக்கும், இதேபோல் கொடுக்க வேண்டும் என, கேட்டுக்கொள்கிறோம்.
திருச்செங்கோடு அருகே, தேவனாங்குறிச்சியில் ஓராண்டு காலமாக போலி மதுபான ஆலை இயங்கி வந்தது. அதேபோல், பல இடங்களில் வீதிக்கு வீதி கஞ்சா விற்பனை, சந்து கடைகளும் இயங்கி வருகின்றன. இதுகுறித்து, எஸ்.பி.,யிடம் புகார் கூறியுள்ளோம். இதற்கும் நடவடிக்கை எடுக்கவில்லை. தேவனாங்குறிச்சியை பொறுத்தவரை, வேறு மாவட்ட போலீசார் நடவடிக்கை எடுத்ததால், இங்கே போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த மாவட்டத்தில் எந்தளவுக்கு போலீசார் சுதந்திரமாக செயல்பட்டனர் என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம்.
மக்கள் நீதி மய்ய தலைவர் பேசுகையில், 'நாங்கள் குடிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை; மிதமாக குடியுங்கள் என்று தான் கூறுகிறோம்' என, கூறுகிறார். இப்படியெல்லாம் ஒரு தலைவர் பேசலாமா? கள்ளச்சாராய சாவில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்பதற்காக தான், சி.பி.ஐ., விசாரணை தேவை என, கூறுகிறோம். உண்மை குற்றவாளிகளை கைது செய்து, இதுபோன்ற குற்றங்கள் இனி நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் சி.பி.ஐ., விசாரணை கோருகிறோம். இவ்வாறு தங்கமணி கூறினார்.