/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அங்காளம்மன் கோவிலில் போலி ரசீது மூலம் வசூல் பக்தர்கள் புகாரால் பரபரப்பு
/
அங்காளம்மன் கோவிலில் போலி ரசீது மூலம் வசூல் பக்தர்கள் புகாரால் பரபரப்பு
அங்காளம்மன் கோவிலில் போலி ரசீது மூலம் வசூல் பக்தர்கள் புகாரால் பரபரப்பு
அங்காளம்மன் கோவிலில் போலி ரசீது மூலம் வசூல் பக்தர்கள் புகாரால் பரபரப்பு
ADDED : ஆக 04, 2024 01:43 AM
ராசிபுரம்,
ராசிபுரம் அடுத்த கடந்தப்பட்டி அங்காளம்மன் கோவிலில், போலி ரசீது மூலம் பொதுமக்களிடம் வசூல் செய்வதாக புகார் எழுந்துள்ளது.
ராசிபுரம் அடுத்த பாய்ச்சல் கடந்தப்பட்டியில், பிரசித்தி பெற்ற அங்காளம்மன் கோவில் உள்ளது. வழக்கு தொடர்பாக கோவில் கடந்த, 13 ஆண்டுகளாக பூட்டப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த, ஓராண்டுக்கு முன் பிரச்னை முடிவுக்கு வந்ததையடுத்து கோவில் திறக்கப்பட்டது. கோவில் திறந்த பின், அங்காளம்மன் அறக்கட்டளை சார்பில் கோவில் நிர்வகிக்கப்பட்டு வந்தது. பதிவு பெற்ற இந்த அறக்கட்டளை, கோவிலை நிர்வகிக்க, பூஜை, அர்ச்சனை, அபிஷேகம் ஆகியவற்றுக்கு கட்டணம் வசூல் செய்து வருகிறது. இதற்காக கட்டண விபரங்கள் வைத்திருப்பதுடன், அறக்கட்டளை சார்பில் பணத்திற்கு ரசீதும் வழங்கி வருகின்றனர்.
ஆனால், கோவிலின் உண்மையான நிர்வாகி என்று, மாணிக்கம் தரப்பினர் பிரச்னையை ஏற்படுத்த தொடங்கினர். இதுதொடர்பாகவும் வழக்கு உள்ளது. இந்நிலையில் மாணிக்கம் தரப்பினர் கோவில் பெயரில் ரசீது அடித்து பக்தர்களிடம் பணம் வசூலிக்க தொடங்கினர். இதற்காக கோவிலில், நேற்று தனியாக டேபிள் போட்டுக்கொண்டனர். வெளியூரில் இருந்து வந்த பக்தர்கள் யாரிடம் பணம் கொடுப்பது என, தெரியாமல் தவித்தனர். இதனால் பொதுமக்களிடம் பெரும் எதிர்ப்பு கிளம்பியது.
நேற்று மதியம், பொதுமக்கள் மற்றும் அங்காளம்மன் அறக்கட்டளை நிர்வாகிகள் என அனைவரும் போலி ரசீது மூலம் பணம் வசூல் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கடந்தப்பட்டியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. புதுச்சத்திரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். துணை தாசில்தார் அஜித் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் பொதுமக்கள், பக்தர்களிடம் சமாதானம் பேசினர். இரண்டு நாட்களில், ஆர்.டி.ஓ., தலைமையில் அமைதி பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்வதாக கூறினர். இதை, இருதரப்பினரும் ஏற்றுக்கொண்டதால் மாலை அமைதி திரும்பியது. ஆடிப்பெருக்கான, நேற்று பக்கத்து ஊர், வெளியூரில் இருந்து வந்த பக்தர்கள், பண வசூல் பிரச்னையால் அதிருப்தியடைந்தனர்.