/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
விண்ணப்பம், 'டிசி' பெற கட்டாய வசூல் மல்லுார் அரசு பள்ளி மீது பெற்றோர் புகார்
/
விண்ணப்பம், 'டிசி' பெற கட்டாய வசூல் மல்லுார் அரசு பள்ளி மீது பெற்றோர் புகார்
விண்ணப்பம், 'டிசி' பெற கட்டாய வசூல் மல்லுார் அரசு பள்ளி மீது பெற்றோர் புகார்
விண்ணப்பம், 'டிசி' பெற கட்டாய வசூல் மல்லுார் அரசு பள்ளி மீது பெற்றோர் புகார்
ADDED : மே 28, 2024 08:58 PM
நாமக்கல்:நாமக்கல் - சேலம் மாவட்ட எல்லையான மல்லுாரில், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில், 6 முதல், பிளஸ் 2 வரை, 550க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.
இப்பள்ளியில், மாற்று சான்றிதழ் பெற, 200 ரூபாய், பிளஸ் 1 உள்ளிட்ட மற்ற வகுப்பில் சேர்வதற்கான விண்ணப்பம், 100 ரூபாய் என, கட்டாய வசூல் செய்வதாக பெற்றோர் குற்றஞ்சாட்டினர். அதுமட்டுமன்றி பிளஸ் 1 வகுப்பில், கணிதம், கம்ப்யூட்டர், பியூர் சயின்ஸ் ஆகிய மூன்று பிரிவுகளில் மாணவர்கள் சேர்க்கை நடந்து வருகிறது. ஒரு பிரிவுக்கு, 40 மாணவர்கள் வீதம், 120 மாணவர்களுக்கு சேர்க்கை வழங்க முடியும். ஆனால், மூன்று பிரிவுகளிலும், 80 மாணவர்களை மட்டுமே சேர்ப்பதாகவும் தெரிவித்தனர்.
மேலும், இப்பள்ளி தலைமை ஆசிரியர் நடராஜன், 'நீட்' நுழைவுத்தேர்வு மையம் நடத்துவதால் பள்ளியில் கவனம் செலுத்துவதில்லை. பிளஸ் 1 சேர்க்கைக்கு வரும் மாணவ - மாணவியரை அலைக்கழிக்கிறார் என, அடுக்கடுக்காக புகார் தெரிவித்தனர்.
மேலும், விண்ணப்பம் விற்பனை செய்த பட்டியலையும், பெற்றோர்களிடம் ரசீது ஏதும் வழங்காமல், பணம் வசூல் செய்ததையும் காட்டினர். இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தலைமை ஆசிரியர் நடராஜனிடம் கேட்டடோது, ''எனக்கும், தனியார் அகாடமிக்கும் எந்த தொடர்பும் இல்லை. மாணவர் சேர்க்கைக்கு, சி.இ.ஓ., சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். அரசாணையில் உள்ள, 19 விதமான முன்னுரிமை அடிப்படையில் தான் மாணவர் சேர்க்கை வழங்க முடியும். என்னால் தன்னிச்சையாக வழங்க முடியாது.
''அலுவலக பணி காரணமாக தான், பெற்றோரை பிறகு வரச் சொன்னேன். நேற்று ஒரு பெற்றோரிடம் இதைத்தான் கூறினேன். இதர செலவினங்களுக்காக விண்ணப்பத்திற்கு பணம் வசூல் செய்யப்படுகிறது. மற்றபடி என் மீது தவறான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளது,'' என்றார்.