/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'சிசிடிவி' கேமரா பொருத்தி ஓட்டு எண்ணும் பணியை முழுவதும் பதிவு செய்ய வேண்டும்: தேர்தல் அலுவலர்
/
'சிசிடிவி' கேமரா பொருத்தி ஓட்டு எண்ணும் பணியை முழுவதும் பதிவு செய்ய வேண்டும்: தேர்தல் அலுவலர்
'சிசிடிவி' கேமரா பொருத்தி ஓட்டு எண்ணும் பணியை முழுவதும் பதிவு செய்ய வேண்டும்: தேர்தல் அலுவலர்
'சிசிடிவி' கேமரா பொருத்தி ஓட்டு எண்ணும் பணியை முழுவதும் பதிவு செய்ய வேண்டும்: தேர்தல் அலுவலர்
ADDED : மே 21, 2024 11:24 AM
நாமக்கல்: 'ஓட்டு எண்ணும் மையத்தில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி ஓட்டு எண்ணும் பணியை முழுதும் பதிவு செய்ய தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும்' என, மாவட்ட தேர்தல் அலுவலர் உமா பேசினார்.
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், ஓட்டு எண்ணிக்கை மையத்தில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான உமா தலைமை வகித்து பேசியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில், லோக்சபா தேர்தல், கடந்த, ஏப்., 19ல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது. 6 சட்டசபை தொகுதிகளுக்கும், திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் தொழில் நுட்ப கல்லுாரியில், ஓட்டு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டுள்ளது. தேர்தலில் பதிவான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 'விவிபேட்' ஆகியவை, ஓட்டு எண்ணும் மையத்தில், மூன்று அடுக்கு பாதுகாப்புடன் தொகுதி வாரியாக வைத்து, 'சீல்' வைக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன், 4ல் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது.
ஓட்டு எண்ணும் மையத்தில் மின் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதி, பாதுகாப்பு ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை, உள்ளாட்சி அமைப்புகள், போலீசார் மேற்கொள்ள வேண்டும். மேலும், ஓட்டு எண்ணும் மையத்தில், மருத்துவ குழு, '108' அவசரகால ஆம்புலன்ஸ் சேவை, தீயணைப்பு வாகனம் ஆகியவை தயார் நிலையில் இருக்க வேண்டும். தபால் வாக்குகளை முறையாக எண்ணுவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
வாகனம் நிறுத்தும் இடம், அறிவிப்பு பலகை, ஒலிப்பெருக்கி, மொபைல் போன் வைக்கும் இடம் ஆகியவற்றை ஏற்படுத்த வேண்டும். செய்தியாளர்களுக்கான ஊடக மையம், செய்தியாளர்கள் செய்தி சேகரிக்க தேவையான ஏற்பாடுகள், ஓட்டு எண்ணிக்கை நிலவரங்களை உடனுக்குடன் வழங்குதல் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும்.
ஓட்டு எண்ணும் மையத்தில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி ஓட்டு எண்ணும் பணியை முழுவதும் பதிவு செய்ய தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். இந்திய தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட ஓட்டு எண்ணும் பணியை முழு ஈடுபாட்டுடன், எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காத வகையில் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
டி.ஆர்.ஓ., சுமன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், நலப்பணிகள் இணை இயக்குனர் ராஜ்மோகன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பூங்கொடி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

