/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மானாவாரியில் பசுந்தீவனம் வளர்ப்பு திட்டம் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
/
மானாவாரியில் பசுந்தீவனம் வளர்ப்பு திட்டம் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
மானாவாரியில் பசுந்தீவனம் வளர்ப்பு திட்டம் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
மானாவாரியில் பசுந்தீவனம் வளர்ப்பு திட்டம் விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
ADDED : நவ 07, 2024 01:29 AM
மானாவாரியில் பசுந்தீவனம் வளர்ப்பு திட்டம்
விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
நாமக்கல், நவ. 7-
'மானாவாரியில் பசுந்தீவன வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதில், விருப்பம் உள்ள விவசாயிகள் விண்ணப்பித்து பயன்பெறலாம்' என, நாமக்கல் கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக முதல்வரால், 2024-25ம் நிதியாண்டில், பசுந்தீவன பற்றாக்குறையை போக்குவதற்காக, கால்நடை பராமரிப்புத்துறை மூலம், மாநிலம் முழுவதும், 4,000 ஏக்கர் இறவை மற்றும் 10,000 ஏக்கர் மானாவாரியில் பசுந்தீவன வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. கால்நடைகளின் உற்பத்தி திறனுக்கு தீவனம் மற்றும் பசுந்தீவனம் மிகவும் இன்றியமையாத காரணிகள். பால் உற்பத்தியை பெருக்குவதற்கு, கறவைமாடுகளுக்கு தேவையான அளவு பசுந்தீவனம் வழங்குவது மிகவும் இன்றியமையாதது.
கால்நடைகளுக்கான மொத்த உற்பத்தி செலவில், 65-70 சதவீதம் தீவனம் மற்றும் பசுந்தீவன உற்பத்திக்கு மட்டுமே செலவிடப்படுகிறது. கால்நடைகளுக்கு பசுந்தீவனத்தின் தேவைக்கும், உற்பத்திக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி உள்ளது. தீவன பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையிலும், கால்நடை வளர்ப்போர் பசுந்தீவனத்தை உற்பத்தி செய்வதை ஊக்கப்படுத்தவும், தமிழக அரசு, 12 ஆண்டுகளாக மாநில தீவன அபிவிருத்தி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தின் கீழ், நாமக்கல் மாவட்டத்தில் விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன், கால்நடை பராமரிப்புத்துறை மூலம், நடப்பு நிதியாண்டில், 50 சதவீதம் அரசு மானியத்துடன் கூடிய தீவன பயிர் சாகுபடி திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இறவையில் பசுந்தீவனம் வளர்ப்பதற்கு, 200 ஏக்கர் பரப்பளவில், தலா, 0.25 ஏக்கரில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, 50 சதவீதம் மானியத்தில் இடுபொருட்கள் வழங்கப்படுகிறது.
தீவன விரயத்தை தடுக்க, புல்நறுக்கும் கருவிகள், 50 சதவீதம் மானியத்தில், 120 எண்ணிக்கையிலான கருவிகள் வழங்கப்படுகிறது. இந்த திட்டங்கள் மூலம் பயன்பெற விருப்பம் உள்ள கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், தங்கள் பகுதிகளில் உள்ள கால்நடை உதவி மருத்துவரை நேரில் அணுகி, விண்ணப்பம் அளித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.