/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
'நான் முதல்வன்' திட்டத்தில் நாமக்கல் முதலிடம்
/
'நான் முதல்வன்' திட்டத்தில் நாமக்கல் முதலிடம்
ADDED : மே 02, 2024 11:29 AM
நாமக்கல்: தமிழகத்தில் அடுத்த, 3 ஆண்டுகளில் உயர்கல்வி சேர்க்கை விகிதத்தை, 51 சதவீதத்தில் இருந்து, 100 சதவீதமாக உயர்த்துவதை நோக்கமாக கொண்டு, 2022ல் பள்ளிக்கல்வி மற்றும் உயர் கல்வித்துறைகளின் கூட்டு முயற்சியுடன், தமிழக முதல்வரால், 'நான் முதல்வன்' திட்டம் தொடங்கப்பட்டது.
மேலும், உயர்கல்வி பயில, 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு, புதுமைப்பெண் திட்டம் மூலம், அனைத்து அரசு பள்ளி மாணவர்களையும், உயர்கல்வியில் சேர்ப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டம் உயர்கல்வி வழிகாட்டல் நடவடிக்கைகளால், 2023ல் தமிழகம் முழுதும் உள்ள பல்வேறு அரசு பள்ளிகளில், பிளஸ் 2ல் சேர்ந்த, மூன்று லட்சத்து, 99,938 மாணவர்களில், இரண்டு லட்சத்து, 41,177 மாணவர்கள், பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர்.
கடந்த ஏப்., 8ல், யு.எம்.ஐ.எஸ்., தரவுத்தளம் மூலம் இந்த எண்ணிக்கை பெறப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில், மாவட்ட கலெக்டரின் வழிகாட்டுதல்படி, உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதன் விளைவாக, மாவட்டத்தில், 2023ல் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய, 10,511 மாணவர்களில், 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் பதிவு செய்து, 7,847 மாணவர்கள் உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர்.
இனிவரும் காலங்களில், 100 சதவீதம் மாணவ, மாணவியர் உயர்கல்வி பயில ஊக்குவிக்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டம், 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ், 75 சதவீதம் மாணவ, மாணவியர் உயர்கல்வி பயில ஊக்குவித்து, மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது.
இதையடுத்து, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட உயர்கல்வி வழிகாட்டல், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் புவனேஸ்வரிக்கு, மாநில திட்ட அலுவலகம் சார்பில் வழங்கப்பட்ட சான்றிதழ் மற்றும் விருதை, கலெக்டர் உமாவிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார். முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, உதவி திட்ட அலுவலர் பாஸ்கரன் உள்பட பலர் பங்கேற்றனர்.

