/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
குமாரபாளையம் பஸ் ஸ்டாண்டில் இட நெருக்கடி
/
குமாரபாளையம் பஸ் ஸ்டாண்டில் இட நெருக்கடி
ADDED : மே 25, 2024 02:27 AM
குமாரபாளையம்: குமாரபாளையம் தற்காலிக பஸ் ஸ்டாண்டில், இட நெருக்கடியால் வாகன ஓட்டிகள் சிக்கி தவித்து வருகின்றனர். அதனால், புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணியை விரைந்து முடிக்க கோரிக்கை எழுந்துள்ளது.
குமாரபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட் கட்டடங்கள், அதன் உறுதி தன்மையை இழந்ததால், அவற்றை அகற்றிவிட்டு புதிய கட்டடங்கள் கட்ட, நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி, பழைய கட்டடங்கள் இடித்து அகற்றப்பட்டு, 7.38 கோடி ரூபாயில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிகள் துவங்கின. இதனால், பஸ்கள் உள்ளே நுழையும் பகுதி அடைக்கப்பட்டது. பின், டெம்போ ஸ்டாண்ட் பகுதியில் தற்காலிக பஸ் ஸ்டாண்ட் அமைத்து கொடுக்கப்பட்டது. பயணிகள் அந்த இடத்தில் இறங்கியும், ஏறியும் வருகின்றனர். பஸ் ஸ்டாண்டில் ஏற்கனவே கடை அமைத்திருந்தவர்களுக்கு, தற்காலிக கடைகள் அமைத்து கொடுக்கப்பட்டன. அங்கிருந்த டெம்போ ஸ்டாண்ட், வேறிடத்திற்கு மாற்றப்பட்டது.
இந்நிலையில், தற்காலிக பஸ் ஸ்டாண்டில் போதிய இட வசதி இல்லாததால், டைமிங் பிரச்னை காரணமாக, போதிய அவகாசம் இருக்கும் பஸ்கள், பஸ் ஸ்டாண்ட் நுழைவுப்பகுதி, இடைப்பாடி சாலை, மீன் மார்க்கெட் அருகே நிறுத்தி வைத்து காத்திருக்கின்றனர். இதனால், தேவூர், இடைப்பாடி, பவானி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் செல்ல வழியின்றி, கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றனர். எனவே, புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணியை விரைந்து முடிக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, நகராட்சி பொறியாளர் ராஜேந்திரன் கூறியதாவது:
குமாரபாளையம் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணிக்காக, 7.38 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த, பிப்., 24ல் பூமி பூஜை போடப்பட்டு பணிகள் துவங்கி நடந்து வருகின்றன. இந்த கட்டுமான பணிகள் ஏறக்குறைய, ஓராண்டில் நிறைவடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

