/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கழிப்பறையில் மயங்கி விழுந்து மாணவர் பலி: உறவினர் மறியல்
/
கழிப்பறையில் மயங்கி விழுந்து மாணவர் பலி: உறவினர் மறியல்
கழிப்பறையில் மயங்கி விழுந்து மாணவர் பலி: உறவினர் மறியல்
கழிப்பறையில் மயங்கி விழுந்து மாணவர் பலி: உறவினர் மறியல்
ADDED : பிப் 27, 2025 01:32 AM

ராசிபுரம்:அரசு பள்ளி மாணவர் கழிப்பறைக்கு சென்றபோது மயங்கி விழுந்து உயிரிழந்தார். மாணவர் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் எல்.ஐ.சி., பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் மகன் கவின்ராஜ், 14. இவர், புதுப்பாளையம் சாலையில் உள்ள சிவானந்தா சாலை அரசு மேல்நிலைப்பள்ளியில், 9ம் வகுப்பு படித்து வந்தார்.
சந்தேகம்
நேற்று காலை, கவின்ராஜ், பள்ளிக்கு சென்றார். காலை, 11:30 மணிக்கு, கழிப்பறைக்கு சென்ற மாணவர் நீண்ட நேரமாகியும் வரவில்லை. சந்தேகமடைந்த சக மாணவர்கள், கழிப்பறைக்கு சென்று பார்த்தபோது, கவின்ராஜ் மயங்கிக் கிடந்தார். உடனடியாக அவரை மீட்டு, ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், மாணவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து, பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போது மாணவர் கவின்ராஜை பார்க்க போலீசார் அனுமதிக்கவில்லை.
அதனால், கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமரசம் செய்தனர்.
தொடர்ந்து, மாணவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மோதல் காரணமா?
இச்சம்பவம் தொடர்பாக, ராசிபுரம் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த மாணவன் உடலில் ரத்தக் காயங்கள் இருந்தது தெரிய வந்துள்ளது.
மேலும், கடந்த, 21, 24ல் பள்ளியில் மாணவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதேபோல், நேற்றும் நடந்துள்ளது.
இந்நிலையில் மாணவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம், பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையே, மாணவன் மரணம் தொடர்பாக, சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யக்கோரி, ராசிபுரம் அரசு மருத்துவமனை மற்றும் எல்.ஐ.சி., அருகே, 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் நடத்தியவர்களை சமாதானப்படுத்தி, போலீசார் அனுப்பி வைத்தனர்.