/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
செயல் அலுவலரை கண்டித்து கவுன்சிலர்கள் போராட்டம்
/
செயல் அலுவலரை கண்டித்து கவுன்சிலர்கள் போராட்டம்
ADDED : ஆக 12, 2024 11:38 PM
ப.வேலுார் : ''மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் ஆதரவு தேவையில்லை. அனைத்து தீர்மானங்களையும் நானே நிறைவேற்றுவேன்,'' என, மேஜையை தட்டி பேசிய, செயல் அலுவலரை கண்டித்து, 10 கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் டவுன் பஞ்சாயத்தில், 18 வார்டுகள் உள்ளன. இங்கு, தி.மு.க.,வை சேர்ந்த லட்சுமி தலைவராகவும், துணைத்தலைவராக ராஜாவும் உள்ளனர். மன்ற அலுவலகத்தில், நேற்று, கவுன்சிலர் கூட்டம் தலைவர் லட்சுமி, செயல் அலுவலர் சோமசுந்தரம் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில், 17 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. அதில், மூன்று தீர்மானங்களுக்கு ஆதரவும், 14 தீர்மானங்களுக்கு, 10 கவுன்சிலர்கள் எதிர்ப்பும் தெரிவித்தனர்.
அப்போது, செயல் அலுவலர் சோமசுந்தரம், ''அனைத்து தீர்மானங்களையும் கவுன்சிலர்கள் நிறைவேற்ற வேண்டும். உங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க எந்த தார்மீக உரிமையும் இல்லை. மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் ஆதரவு தேவையில்லை.
''அனைத்து தீர்மானங்களையும் நானே நிறைவேற்றுவேன். எனக்கு சட்டம் தெரியும், சட்டப்படி நான் நடவடிக்கை எடுப்பேன்,'' எனக்கூறி, மேஜையை தட்டி பேசினார். இதனால், செயல் அலுவலருக்கும், கவுன்சிலர்களுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
தொடர்ந்து, தீர்மானங்களுக்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை என்பதால், டவுன் பஞ்சாயத்து தலைவர் லட்சுமி, செயல் அலுவலர் சோமசுந்தரம் மற்றும் ஆதரவு கவுன்சிலர்கள் வெளியே சென்று விட்டனர்.
இதையடுத்து, 'கூட்டத்தை நிறைவு செய்ய தலைவர் லட்சுமி, செயல் அலுவலர் சோமசுந்தரம் வரவேண்டும்' என, வலியுறுத்தி, 10 கவுன்சிலர்களும் தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
செயல் அலுவலர் சோமசுந்தரம் கூறியதாவது:
ப.வேலுார் டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர்கள் கூட்டம் நடந்து முடிந்தது. எதற்காக கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்துகின்றனர் என, எனக்கு தெரியவில்லை.
கவுன்சிலர்கள் குற்றம் சாட்டியுள்ளபடி, நான் ஒரு தரப்புக்கு சாதகமாக தீர்மானங்களை நிறைவேற்றவில்லை.
கவுன்சிலர்கள் மனு கொடுத்துள்ளனர். அதில், சட்டப்படி செய்ய வேண்டும் என, தெரிவித்துள்ளனர். அதேபோல் சட்டப்படி செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.