/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கணவனை கொன்ற மனைவி காதலனுடன் சிக்கினார்
/
கணவனை கொன்ற மனைவி காதலனுடன் சிக்கினார்
ADDED : ஆக 07, 2024 01:57 AM
நாமக்கல்:நாமக்கல் மாவட்டம், ஊர்ப்புரத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன், 42, விவசாயி. இவரது மனைவி கலாவதி, 40. தம்பதிக்கு, இரண்டு மகன்கள், மகள் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி விட்டது. கடந்த, 4ம் தேதி இரவு, ரவிச்சந்திரன் கொலை செய்யப்பட்டார். அவரின் கழுத்தை இறுக்கி கொலை செய்த அடையாளம் இருந்தது. வாழவந்திநாடு போலீசார் விசாரித்தனர்.
போலீசார் கூறியதாவது:
கணவன், மனைவி இருவரும், கேரளாவுக்கு எஸ்டேட் வேலைக்கு சென்று வருவது வழக்கம். அப்போது, அருகில் உள்ள ஊரைச் சேர்ந்த சக்திவேல், 32, என்பவருடன், கலாவதிக்கு பழக்கம் ஏற்பட்டது. இதை அறிந்த ரவிச்சந்திரன், மனைவியை கண்டித்தார்.
இதனால், கோபமடைந்த மனைவி, காதலுனுடன் இணைந்து கணவரை தீர்த்து கட்ட முடிவு செய்தார். நள்ளிரவு, 12:00 மணிக்கு, சக்திவேலை வரவழைத்து, இருவரும் சேர்ந்து ரவிச்சந்திரன் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்தனர். இயற்கையாக மரணம் அடைந்ததாக, மனைவி கலாவதி நாடகமாடினார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதையடுத்து, வாழவந்திநாடு போலீசார், கலாவதி, அவரது காதலன் சக்திவேல் ஆகியோரை கைது செய்து விசாரிக்கின்றனர்.