/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
புதிய செயலியில் வாகன புகை பரிசோதனை இன்று முதல் பயன்பாட்டுக்கு வரும்: ஆர்.டி.ஓ.,
/
புதிய செயலியில் வாகன புகை பரிசோதனை இன்று முதல் பயன்பாட்டுக்கு வரும்: ஆர்.டி.ஓ.,
புதிய செயலியில் வாகன புகை பரிசோதனை இன்று முதல் பயன்பாட்டுக்கு வரும்: ஆர்.டி.ஓ.,
புதிய செயலியில் வாகன புகை பரிசோதனை இன்று முதல் பயன்பாட்டுக்கு வரும்: ஆர்.டி.ஓ.,
ADDED : மே 06, 2024 01:55 AM
நாமக்கல்: 'மாவட்டத்தில், இன்று முதல் புதிய செயலி மூலம் வாகன புகை பரிசோதனை சான்று வழங்கப்படும்' என, நாமக்கல் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகேசன் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில், தமிழகம் முழுதும் உள்ள வாகன புகை பரிசோதனை மையங்களில், துணை போக்குவரத்து ஆணையர்கள், இணை ஆணையர்கள் வட்டார போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சோதனை மேற்கொண்டனர். அப்போது, 50 மையங்களில் பல்வேறு குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அங்கீகரிக்கப்பட்ட சோதனை செய்ய வேண்டிய நபர் இன்றி, வேறு நபர்கள் பணியில் இருந்ததும், உரிமம் வழங்கப்பட்ட இடத்தில் இல்லாமல் வேறு இடத்தில் இயங்கியதும், கேமரா பொருத்தப்படாதது, உரிமம் புதுப்பிக்காமல் இயங்கியது போன்றவை தெரியவந்து, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, அம்மையங்களை மேம்படுத்தவும், புகாரை தவிர்க்க தொழில்நுட்பங்கள் உருவாக்கி, 'பி.யு.சி.சி., 2.0' வெர்சன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, நாமக்கல் வடக்கு
வட்டார போக்குவரத்து அலுவலர்
முருகேசன் வெளியிட்ட அறிக்கை:
வாகன புகை பரிசோதனை மையங்களில், 'லைசென்சு' பெற்றுள்ளவர்களின் தனிப்பட்ட மொபைல் எண் பயன்படுத்தப்படும். அதில், இந்த புதிய செயலி நிறுவப்பட்டு ஜி.பி.எஸ்., வசதியுடன் இயங்கும். அந்த செயலி உள்ள மொபைல் போன், வாகன பரிசோதனை மையத்தில் இருந்து, 30 மீட்டருக்குள் மட்டுமே செயல்படும். வாகன புகை பரிசோதனையின் போது, 2 புகைப்படங்கள் எடுக்கப்படும். அதில் வாகன பதிவு எண், மையத்தின் பெயர் பலகையுடன் முழு தோற்றம், அங்கீகரிக்கப்பட்ட சோதனையாளர் போன்றவை படத்தில் இடம் பெறுவார்கள். விதிமுறைகள் முழுமையாக கடைப்பிடித்தால் மட்டுமே, புகை பரிசோதனை சான்று பதிவிறக்கம் செய்யவோ, பிரின்ட் எடுக்கவோ முடியும்.
ஜி.பி.எஸ்., கருவியால், வாகனம் இருக்கும் இடம் கண்டறியப்படுவதால், வாகனம் கொண்டு வராமல் புகை பரிசோதனை செய்ய முடியாது. இந்த நடைமுறை இன்று (மே, 6) முதல், தமிழகம் முழுவதும் நடைமுறைக்கு வருகிறது. நாமக்கல் மாவட்டத்திலும், இந்த புதிய முறை அமலுக்கு வருகிறது. இப்புதிய முறையான, 'பி.யு.சி.சி., 2.0 வெர்சன்' செயலியை, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள புகை பரிசோதனை மைய உரிமைதாரர்கள் அந்தந்த பகுதி வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பெற வேண்டும். இன்று (மே, 6) முதல் இந்த செயலி மூலமாக மட்டுமே வாகன புகை பரிசோதனை செய்ய வேண்டும். இதில் குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டால், புகை பரிசோதனை மையங்கள், 'சீல்' வைக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

