ADDED : செப் 27, 2025 01:22 AM
எருமப்பட்டி, எருமப்பட்டி, பவித்திரம் அருகே, நவலடிப்பட்டியை சேர்ந்தவர் சின்னசாமி, 80; விவசாயி. இவர் பட்டி அமைத்து ஆடுகளை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, விவசாய நிலத்தில் அமைத்துள்ள பட்டியில் ஆடுகளை அடைத்துவிட்டு, சின்னசாமி வீட்டிற்கு சென்றார். அதிகாலை, பட்டிக்குள் புகுந்த வெறிநாய்கள், செம்மறி, வெள்ளாடுகளை கடித்து குதறி ரத்தத்தை ருசித்துவிட்டு சென்றன.
இதில் வயிற்று பகுதியில் இருந்து குடல் சரிந்த நிலையில், ஆடுகள் இறந்துகிடந்தன. இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து, சின்னசாமிக்கு தகவல் தெரிவித்தனர். அவர் வந்து பார்த்தபோது, 10 ஆடுகள் உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.மேலும், மூன்று ஆடுகள் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தன. எருமப்பட்டி கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து காயமடைந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தனர். இறந்த ஆடுகளை பிரேத பரிசோதனை செய்து சென்றனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.