/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
பல கோடி மதிப்புள்ள திமிங்கில எச்சம் விற்க முயன்ற 3 பேர் கைது
/
பல கோடி மதிப்புள்ள திமிங்கில எச்சம் விற்க முயன்ற 3 பேர் கைது
பல கோடி மதிப்புள்ள திமிங்கில எச்சம் விற்க முயன்ற 3 பேர் கைது
பல கோடி மதிப்புள்ள திமிங்கில எச்சம் விற்க முயன்ற 3 பேர் கைது
ADDED : ஏப் 20, 2025 01:56 AM
ராசிபுரம்:ராசிபுரம் அருகே, பல கோடி ரூபாய் மதிப்புள்ள திமிங்கில எச்சத்தை விற்க முயன்ற, மூன்று பேரை வனத்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த பேளுக்குறிச்சி அருகே, ஜி.வி.ஆர்., என்ற பெயரில், தனியாருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு, பல கோடி ரூபாய் மதிப்புள்ள திமிங்கில எச்சம் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக, ராசிபுரம் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கடந்த, இரண்டு நாட்களாக வனச்சரக அலுவலர் சக்திவேல் தலைமையில் வனத்துறையினர், சம்பந்தப்பட்ட பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், நேற்று காலை, சந்தேகப்படும்படி, இரண்டு கார்கள் தோட்டத்திற்குள் நுழைந்தன.
இதைப்பார்த்த வனத்துறையினர், அதிரடியாக உள்ளே நுழைந்து அங்கிருந்தவர்களை சுற்றி வளைத்தனர். அப்போது, இரண்டு பேர் தப்பி ஓடினர். அங்கு நடத்திய சோதனையில், திமிங்கில எச்சம் விற்பனைக்கு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், நாமக்கல் மாவட்டம், பேளுக்குறிச்சியை சேர்ந்த வெங்கடேசன், 55, சேலத்தை சேர்ந்த ஜலீல், 58, ரவி, 55, ஆகியோர் என்பதும்; தப்பி ஓடியவர்கள், கொல்லிமலையை சேர்ந்த சந்திரன், வாழப்பாடியை சேர்ந்த ராம்குமார் என்பதும் தெரியவந்தது. இவர்களிடம் இருந்து, பல கோடி ரூபாய் மதிப்புள்ள, 18 கிலோ திமிங்கில எச்சம், ஐந்து மொபைல் போன், இரண்டு கார்களை பறிமுதல் செய்தனர்.
மேலும், திமிங்கில எச்சத்தை, சந்திரன், ராம்குமார் ஆகிய இருவரும் எடுத்து வந்துள்ளனர். இதை விலைபேசி விற்கும் பணிக்கு, மூன்று பேர் வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, மூன்று பேரையும் கைது செய்து, சேந்தமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நாமக்கல் சிறையில் அடைத்தனர். தப்பியோடியவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
'அம்பர் கிரீஸ்' என்ற திமிங்கில எச்சம்ராசிபுரம் வனச்சரக அலுவலர் சக்திவேல் கூறியதாவது:'அம்பர் கிரீஸ்' என, சர்வதேச அளவில் அழைக்கப்படும் திமிங்கில எச்சம் அல்லது திமிங்கில வாந்தி, கடல் பகுதியில் திமிங்கிலத்திற்கு ஜீரணம் ஆகாமல் உமிழும் பொருளாகும். இது கடல் தண்ணீர், வெப்பம் ஆகியவற்றுடன் சேர்ந்து, 'அம்பர் கிரீஸ்' ஆக மாறுகிறது. வாசனை திரவியம், மருத்துவத்துறைக்கு அதிகளவு பயன்படுகிறது. தரமான ஒரு கிலோ, 'அம்பர் கிரீஸ்' ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புடையது. வெளிநாடுகளுக்கு அதிகளவு கடத்தப்படுகிறது. இதன் தரம் குறித்து தெரிந்துகொள்ள ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
*

