/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மின் கம்பியை திருடிய 3 வாலிபர்களுக்கு 'காப்பு'
/
மின் கம்பியை திருடிய 3 வாலிபர்களுக்கு 'காப்பு'
ADDED : ஜூலை 29, 2025 01:07 AM
நாமகிரிப்பேட்டை, நாமகிரிப்பேட்டை இ.பி., அலுவலகத்திற்கு சொந்தமான, 110 கிலோ மின் கம்பியை, ஆத்துார் மெயின்ரோடு, ஏ.ஜி.பி.ஆர்., நகர் அருகே வைத்திருந்தனர். இந்த கம்பியை, நேற்று அடையாளம் தெரியாத நபர்கள் திருடி சென்றுவிட்டதாக, நாமகிரிப்பேட்டை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் குழந்தைவேலு, 41, போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தார். புகார்படி, நாமகிரிப்பேட்டை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு வந்த சரக்கு ஆட்டோவை பரிசோதனை செய்தபோது, இ.பி., அலுவலக மின் கம்பி இருந்தது தெரிந்தது. விசாரித்தபோது ஆட்டோ டிரைவர் உள்ளிட்ட, மூன்று பேரும் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். இதையடுத்து, மூன்று பேரையும் போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச் சென்று விசாரித்தனர்.
அதில், ராசிபுரம் அருகேயுள்ள மோளப்பாளையம் பகுதியை சேர்ந்த குழந்தைவேலு மகன் ராகுல், 26, சிங்களாந்தபுரம் பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் கார்த்திக், 23, சிங்களாந்தபுரம் அம்மன் காலனியை சேர்ந்த முருகேசன் மகன் சங்கர் என்பதும், மூன்று பேரும் இ.பி.,க்கு சொந்தமான அலுமினிய கம்பியை திருடியது தெரியவந்தது.
கம்பியை பறிமுதல் செய்து, மூன்று பேரையும் சிறையில் அடைத்தனர்.