/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
நாமக்கல்லில் கலைத்திருவிழா 380 மாணவர்கள் அசத்தல்
/
நாமக்கல்லில் கலைத்திருவிழா 380 மாணவர்கள் அசத்தல்
ADDED : அக் 15, 2025 01:07 AM
நாமக்கல், நாமக்கல்லில் நடந்த கலைத்திருவிழாவில், 380க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்று, தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தினர்.
தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில், வட்டார அளவிலான கலைத்திருவிழா, தமிழகம் முழுவதும், நேற்று முன்தினம் துவங்கியது. பள்ளிக்கல்வித்துறை சார்பில், பள்ளி அளவிலான கலைத்திருவிழா, கடந்த சில நாட்களுக்கு முன் நடந்தது.
இதில், வெற்றி பெற்று, முதல் பரிசு பெற்ற மாணவர்களுக்கு, வட்டார அளவிலான கலைத்திருவிழா, நாமக்கல் வட்டார வளமையத்தில், நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளில், ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு நடந்தது. நேற்று, 6 முதல், 8ம் வகுப்பு மாணவர்களுக்கு, கலைத்திருவிழா நடந்தது.
இதில், பாரம்பரிய நடனமான பரதக்கலை, ஒயிலாட்டம், காவடி ஆட்டம், பறை இசை, தவில், புல்லாங்குழல் இசை போன்ற பேட்டிகள் நடந்தன. மேலும், களிமண் சுதை வேலைப்பாடு மற்றும் மணல் சிற்பம் செய்தல், ரங்கோலி ஓவியம் வரைந்து வண்ணம் தீட்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடந்தன. வீதி நாடகம் இலக்கிய நாடகம், மாறுவேட போட்டி, வில்லுப்பாட்டு, நாட்டுப்புற பாடல், கிராமிய நடனம், பரதநாட்டியம், பேச்சுப்போட்டி ஆகிய போட்டிகள் நடந்தன. அதில், 26 பள்ளிகளை சேர்ந்த, 380க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் தங்களது தனித்திறமையை வெளிப்படுத்தினர். இன்றும் கலைத்திருவிழா நடக்கிறது.