/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ஓட்டல் உரிமையாளரிடம் 4 பவுன் தங்க சங்கிலி பறிப்பு
/
ஓட்டல் உரிமையாளரிடம் 4 பவுன் தங்க சங்கிலி பறிப்பு
ADDED : மே 19, 2025 02:38 AM
குமாரபாளையம்: குமாரபாளையம், அய்யன் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மாதேஸ்வரன், 56. இவர், வீட்டிலேயே ஓட்டல் நடத்தி வருகிறார். இவர், நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு, தன் டூவீலரில், சமையல் உதவியாளரான வேம்பு என்பவரை அழைத்துக்கொண்டு, குமாரபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சர்வீஸ் சாலையில் சென்றுகொண்டிருந்தார். அப்போது இருள் சூழ்ந்த பகுதியில் வந்த மர்மநபர், மாதேஸ்வரன் ஓட்டிச்சென்ற டூவீலரை எட்டி உதைத்தார். இதில், இருவரும் கீழே விழுந்தனர். பின், மாதேஸ்வரனை தாக்கி அவர் கழுத்தில் அணிந்திருந்த, ஆறு பவுன் தங்க சங்கிலியை பறித்துள்ளார்.
அப்போது, தங்க சங்கிலியின் ஒரு பகுதியை மாதேஸ்வரன் பிடித்துக்கொண்டதால், இரண்டு பவுன் தப்பியது. மீதமுள்ள நான்கு பவுனை மர்மநபர் பறித்துக்கொண்டு தப்பினார். இதுகுறித்து குமாரபாளையம் போலீசில் புகாரளித்தார். மேலும், திருச்செங்கோடு டி.எஸ்.பி., கிருஷ்ணன் நேரில் விசாரணை நடத்தினார். இதையடுத்து, டி.எஸ்.பி., தலைமையில், மூன்று தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.