/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கொல்லிமலையில் மர்ம விலங்கு கடித்து ஒரு பன்றி, 7 ஆடுகள் பலி
/
கொல்லிமலையில் மர்ம விலங்கு கடித்து ஒரு பன்றி, 7 ஆடுகள் பலி
கொல்லிமலையில் மர்ம விலங்கு கடித்து ஒரு பன்றி, 7 ஆடுகள் பலி
கொல்லிமலையில் மர்ம விலங்கு கடித்து ஒரு பன்றி, 7 ஆடுகள் பலி
ADDED : ஜன 04, 2025 01:26 AM
சேந்தமங்கலம், ஜன. 4-
கொல்லிமலையில் மர்ம விலங்கு கடித்து, கடந்த, 5 நாளாக தொடர்ந்து ஆடுகள் உயிரிழந்து வருகின்றன.
இந்நிலையில், குண்டூர்நாடு, தீவட்டிக்காடு மலைக்கிராமத்தில் பழனிசாமி, 37, என்ற விவசாயி, வீட்டின் பின்புறம் பட்டி அமைத்து பன்றி, ஆடுகளை வளர்த்து
வருகிறார்.
நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு திடீரென பன்றி கத்தும் சத்தம் கேட்டுள்ளது. இதைக்கேட்ட பழனிசாமி, உடனடியாக அங்கு வந்து பார்த்துள்ளார்.
அப்போது, மர்ம விலங்கு ஒன்று ஓடியுள்ளது. பின், பட்டியில் சென்று பார்த்தபோது, அங்கு கட்டி வைத்திருந்த, 3 ஆடுகள், ஒரு பன்றி உயிரிழந்து கிடந்தன. இதேபோல், பார்வதி, 54, என்பவரின் பட்டியில், 4 ஆடுகள் உயிரிழந்து கிடந்தன.
இந்த மர்ம விலங்கு கடித்து, இதுவரை, 25க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்த நிலையில், நேற்று பன்றி ஒன்றும் உயிரிழந்த சம்பவம், அப்பகுதி விவசாயிகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
11 பேருக்கு ரூ.78,000 இழப்பீடு
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், கொல்லிமலை வனச்சரகத்தில் மர்ம விலங்கு தாக்குதல் தொடர்பான ஆய்வு கூட்டம், நேற்று நடந்தது. மாவட்ட வன அலுவலர் கலாநிதி முன்னிலை வகித்தார். கலெக்டர் உமா தலைமை வகித்து பேசியதாவது:
நாமக்கல் வனக்கோட்டம், கொல்லிமலை வனச்சரகத்திற்குட்பட்ட அரியூர்நாடு, குண்டூர்நாடு, வாழவந்திநாடு ஆகிய பஞ்.,களில், மர்ம விலங்கு, ஒரு வாரமாக கால்நடைகளான ஆடுகளை கடித்து கொன்று வருகிறது. 2024 டிச., 23 முதல் இன்று (நேற்று) வரை, மொத்தம், 26 ஆடுகள் மர்ம விலங்கு கடித்து இறந்துள்ளன. 26 ஆடுகள் இழந்த, 11 பேருக்கு, 78,000 ரூபாய் நிவாரண தொகை உடனடியாக வழங்கப்பட்டுள்ளது.
அரசுத்துறை சார்பில் தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். இவ்வாறு அவர் பேசினார்.
டி.ஆர்.ஓ., சுமன், வனச்சரக அலுவலர் சுகுமார், அரசுத்துறை அலுவலர்கள் உள்பட பலர்
பங்கேற்றனர்.

