/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கல்லாங்குளம் அண்ணாமலையார் கோவிலில் அபிஷேக ஆராதனை
/
கல்லாங்குளம் அண்ணாமலையார் கோவிலில் அபிஷேக ஆராதனை
ADDED : அக் 05, 2025 01:23 AM
வெண்ணந்துார் புரட்டாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு, கல்லாங்குளம் அண்ணாமலையார் கோவிலில் சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன.
வெண்ணந்துார் ஒன்றியம், கல்லாங்குளம் அண்ணாமலையார் கோவிலில் புரட்டாசி மாத பிரதோஷ தினத்தை முன்னிட்டு, நந்தி பகவானுக்கு பால், தயிர், இளநீர், மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அருகம்புல் மற்றும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
* பிரதோஷத்தையொட்டி, குமாரபாளையம் திருவள்ளுவர் நகர் மங்களாம்பிகை மகேஸ்வரர் கோவிலில், நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார வழிபாடுகள் நடந்தன. அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் சுவாமிகள் வலம் வந்தனர்.
இதேபோல் சேலம் சாலை, ராஜா வீதி சவுண்டம்மன் கோவில்கள், சின்னப்பநாயக்கன்பாளையம், காந்தி நகர் அங்காளம்மன் கோவில்கள், உடையார்பேட்டை ராஜவிநாயகர் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டன.
* சேந்தமங்கலம், சவுந்திரவள்ளி அம்பாள் சமேத சோமேஸ்வரர் கோவிலில், சனிபிரதோஷத்தை முன்னிட்டு, சிறப்பு யாக வேள்வி பூஜை நடைபெற்றது. சோமேஸ்வரர் மற்றும் நந்தி பகவானுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், திருமஞ்சனம், இளநீர் மற்றும் பன்னீர் போன்ற பல்வேறு வகையான வாசனை பொருட்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.
மேலும் பிரதோஷ உற்சவ மூர்த்தி கோவிலின் உள் பிரகாரத்தில், கயிலை வாத்தியம் முழங்க வலம் வந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.