/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
கூடுதல் விலைக்கு உரம் விற்றால் நடவடிக்கை
/
கூடுதல் விலைக்கு உரம் விற்றால் நடவடிக்கை
ADDED : அக் 05, 2024 06:16 AM
நாமக்கல்: 'நாமக்கல் மாவட்டத்தில் கூடுதல் விலைக்கு உரம் விற்றால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, வேளாண் இணை இயக்குனர் (பொ) பேபிகலா தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
நாமக்கல் மாவட்டத்தில், 1,354 ஹெக்டேர் நெற்பயிர், 42,263 ஹெக்டேர் சிறுதானிய பயிர்கள், 6,735 ஹெக்டேர் பயறுவகை பயிர்கள், 1,197 ஹெக்டேர் பருத்தி பயிர், 7,253 ஹெக்டேர் கரும்பு பயிர், 27,346 ஹெக்டேர் எண்ணெய் வித்து பயிர் என, மொத்தம், 86,147 ஹெக்டேர் பரப்பளவில் பயிர் சாகுபடி நடக்கிறது.
இப்பயிர் சாகுபடிக்கு தேவையான ரசாயன உரங்கள், தனியார், கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டு, விவசாயிகளுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது. உர இருப்பில் யூரியா, 2,156 மெ.டன்., டி.ஏ.பி., 852 மெ.டன்., பொட்டாஷ், 1,210 மெ.டன்., காம்ப்ளக்ஸ் உரம், 3,661 மெ.டன்., மற்றும் சூப்பர் பாஸ்பேட் உரம், 448 மெ.டன்., என்ற அளவில் இருப்பு வைக்கப்பட்டு, முறையாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.மாவட்ட அளவிலான, நிலையான கண்காணிப்பு குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும், உரங்களை நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய கூடாது; சரியான அளவில் உரம் வினியோகம் செய்ய வேண்டும் என, விற்பனையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் உரம் வாங்க செல்லும் போது, ஆதார் அட்டையை கொண்டு சென்று, பி.ஓ.எஸ்., இயந்திரம் மூலம் பட்டியலிட கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.