/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாவட்டத்தில் 5.40 லட்சம் ரேஷன்தாரர்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்க நடவடிக்கை
/
மாவட்டத்தில் 5.40 லட்சம் ரேஷன்தாரர்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்க நடவடிக்கை
மாவட்டத்தில் 5.40 லட்சம் ரேஷன்தாரர்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்க நடவடிக்கை
மாவட்டத்தில் 5.40 லட்சம் ரேஷன்தாரர்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்க நடவடிக்கை
ADDED : ஜன 07, 2024 11:33 AM
நாமக்கல்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மாவட்டம் முழுவதும் உள்ள, 5.40 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க இலவச வேட்டி, சேலை, ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், பொங்கல் தொகுப்புடன், 1,000 ரூபாய் ரொக்கப்பணம் வழங்குவது வழக்கம். அதன்படி, நடப்பாண்டில், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு செங்கரும்பு, 1,000 ரூபாய் ரொக்கப்பணம் வழங்கப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், பொங்கல் பரிசு தொகுப்புடன் வேட்டி, சேலையும் சேர்த்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளுக்கு, ஒரே நேரத்தில் கூட்டமாக வருவதை தவிர்க்க, இன்று (ஜன., 7) முதல், டோக்கன் வினியோகம் செய்யப்படுகிறது.
நாமக்கல் மாவட்டத்தில், 885 கூட்டுறவு சங்கங்கள், 4 மகளிர் சுயஉதவிக்குழுக்கள், 45 நுகர்பொருள் வாணிப கழக கடைகள் என, மொத்தம், 934 ரேஷன் கடைகள் உள்ளன. இந்த கடைகளில், 5.40 லட்சம் ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். இதற்காக, கொள்முதல் செய்யப்பட்ட இலவச வேட்டி, சேலைகள், மாவட்டத்தில் உள்ள, நாமக்கல், மோகனுார், சேந்தமங்கலம், கொல்லிமலை, ராசிபுரம், ப.வேலுார், திருச்செங்கோடு, குமாரபாளையம் ஆகிய, 8 தாலுகா அலுவலகங்களில் இருப்பு வைக்கப்பட்டிருந்தன. தற்போது, அவை அந்தந்த ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
நாமக்கல் தாலுகாவில், 130 ரேஷன் கடைகள் உள்ளன. அவற்றில் உள்ள ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்க, 58,607 சேலை, 57,174 வேட்டியை, தாசில்தார் சக்திவேல் முன்னிலையில் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
கேள்விக்குறியான பொங்கல் பரிசு
ராசிபுரம் தாலுகாவில், 190க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் உள்ளன. இதில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன், இலவச வேட்டி, சேலை வழங்க, அந்தந்த ரேஷன் கடைகளுக்கு, நேற்று அனுப்பி வைக்கப்பட்டன. பொங்கல் பரிசு பொருட்களை, வரும், 10 முதல் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணியில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். பொங்கல் பரிசு வழங்க, 'டோக்கன்' அச்சடிக்கும் பணியும் நடந்து வருகிறது.
இந்நிலையில், 'டோக்கன்' கைக்கு கிடைத்தாலும், தகுதியான நபர்கள் பட்டியல் வரும் வரை டோக்கன் வழங்க கூடாது என, அதிகாரிகள் வாய்மொழி உத்தரவிட்டுள்ளனர். அதேசமயம், மகளிர் உரிமைத்தொகை கிடைக்காதவர்களுக்கு, பொங்கல் பரிசு கிடைப்பது கேள்விக்குறியாகியுள்ளது. இதனால், குடும்ப அட்டைதாரர்களின் தகுதி நிலையை அரசு மாற்றுமா என, பொதுமக்களிடையே சந்தேகம் எழுந்துள்ளது.