ADDED : டிச 31, 2024 07:23 AM
ராசிபுரம்: ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவையொட்டி, மெட்டாலா கணவாய் ஆஞ்சநேயர் கோவிலில், நேற்று அதிகாலை சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து, வடைமாலை அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மதியம், சந்தனகாப்பு, செந்துார அலங்காரம் செய்யப்பட்டது. ஆத்துார் பிரதான சாலையில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர். அதேபோல், ராசிபுரம் அபயஹஸ்த ஆஞ்சநேயர், சேலம் சாலையில் உள்ள வைரமலை ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. மேலும், நேற்று அமாவாசை என்பதால், ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, ஆர்.புதுப்பட்டி மாரியம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. கோவில்களில் பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. நாமகிரிப்பேட்டை பெருமாள் கோவிலில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில், நேற்று காலை முதல் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருந்தது.
* மல்லசமுத்திரம் அருகே, காளிப்பட்டி கந்தசாமி கோவில் பின்புறம் உள்ள சென்றாய பெருமாள் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள வீரபக்த ஆஞ்சநேயர் சுவாமிக்கு, 1,008 வடைமாலை, வெற்றிலை, துளசிமாலை அணிவிக்கப்பட்டு, மூலிகை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.
* குமாரபாளையம் திருவள்ளுவர் நகர் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடந்தது. இதேபோல் அக்ரஹாரம் ஆஞ்சநேயர் கோவில், பாண்டுரங்கர் கோவில், ராமர் கோவில், கள்ளிபாளையம் ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
* சேந்தமங்கலம் அருகே உள்ள நைனாமலை அடிவாரத்தில், பிரசித்தி பெற்ற வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு, சுவாமிக்கு பால், தயிர், இளநீர் உள்ளிட்ட, 24 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதேபோல், மரூர்பட்டியில் உள்ள பக்த ஆஞ்சநேயருக்கு, பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. தொடர்ந்து, வடைமாலை சாற்றி தீபாராதனை நடந்தது.