/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
அரசு பொது கிணற்றில் தங்க மண் திருட முயற்சி
/
அரசு பொது கிணற்றில் தங்க மண் திருட முயற்சி
ADDED : பிப் 06, 2024 10:35 AM
நாமக்கல்: 'அரசு பொது கிணற்றில் இருந்து, தங்க மண் திருட முயன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, முத்துகாப்பட்டி பஞ்., மேதரமாதேவி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
நாமக்கல் மாவட்டம், முத்துகாப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட மேதரமாதேவி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள், நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகம் திரண்டு, குறைதீர் கூட்டத்தில் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர்.
அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:- எங்கள் கிராமத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான பாழடைந்த கிணற்றில், 200 டன் தங்கமண் கொட்டப்பட்டுள்ளது. அதில் இருந்து தங்கம் மற்றும் கனிம வளங்களை பிரித்து எடுத்தால், 50 கோடி ரூபாய்க்கு போகும் என கூறப்படுகிறது. இந்த கிணற்றில், 15 ஆண்டுகளுக்கு முன், அரசு செலவில் மண்ணை கொட்டி மூடப்பட்டது. இதை அபகரிக்க ஏற்கனவே, 5 ஆண்டுகளுக்கு முன் முயற்சி நடந்தது. அப்போது, வருவாய்த்துறை மூலம் தடுத்து நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், கடந்த, 3ல், சிலர் கூலிப்படை துணை கொண்டு, பொதுமக்களை அச்சுறுத்தி தங்க மண்ணை திருட முயன்றனர். நாங்கள் போலீசார் துணையுடன் தடுத்து நிறுத்தி விட்டோம். நாமக்கல் கலெக்டர் உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, கோரிக்கையை வலியுறுத்தியும், தங்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரியும், நாமக்கல் கலெக்டர் அலுவலகம் முன், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

