/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
செம்மை நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெற்ற விவசாயிக்கு விருது: விண்ணப்பிக்க அழைப்பு
/
செம்மை நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெற்ற விவசாயிக்கு விருது: விண்ணப்பிக்க அழைப்பு
செம்மை நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெற்ற விவசாயிக்கு விருது: விண்ணப்பிக்க அழைப்பு
செம்மை நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெற்ற விவசாயிக்கு விருது: விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : டிச 14, 2024 01:03 AM
நாமக்கல், டிச. 14-
'செம்மை நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெற்ற விவசாயி களுக்கு விருது வழங்கப்படுகிறது. நாமக்கல் மாவட்ட விவசாயிகள் விண்ணப்பித்து பயன்பெறலாம்' என, வேளாண் இணை இயக்குனர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
நாமக்கல் மாவட்டத்தில், 2024-25ம் ஆண்டிற்கான உரிய தொழில் நுட்பத்தை கடைப்பிடித்து செம்மை நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், மாநிலத்தில் அதிக மகசூல் பெறும் விவசாயிகளுக்கு, 'நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது' அறிவிக்கப்பட்டு, அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது. இப்போட்டியில், மாநில அளவில் முதலிடம் பெறும் விவசாயிகளுக்கு முதல் பரிசாக, 5 லட்சம் ரூபாய், சிறப்பு பரிசு மற்றும் 7,000 ரூபாய் மதிப்புள்ள பதக்கமும் வழங்கப்படும்.
போட்டியில் கலந்து கொள்ளும் விவசாயிக்கு, குறைந்தபட்சம், 2 ஏக்கர் நிலம் சொந்தமாகவோ அல்லது குத்தகையாகவோ திருந்திய முறையில் நெல் சாகுபடி செய்திருக்க வேண்டும். மேலும், பயிர் விளைச்சல் போட்டியில் குறைந்தபட்சம், 50 சென்ட் நடுவர்கள் முன்னிலையில் அறுவடை செய்யப்படும். இப்போட்டியில் கலந்துகொள்ளும் விவசாயிகள், அரசால் அங்கீகரிக்கப்பட்ட நெல் ரகங்களை மட்டுமே பயிர் செய்திருக்க வேண்டும்.
இத்திட்டத்தில் பங்கு பெற விரும்பும் விவசாயிகள், தங்களது வட்டார வேளாண் உதவி இயக்குனரை அணுகி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், பதிவு கட்டணமாக, 150 ரூபாய் செலுத்தி பதிவு செய்துகொள்ள வேண்டும். வெற்றியாளர்களை அறிவிப்பதில் வேளாண் இயக்குனர் தலைமையிலான மாநில அளவிலான குழுவின் முடிவே இறுதியானது. விவசாயிகள் அனைவரும் இப்போட்டியில் கலந்துகொண்டு பயன் பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.