/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
ப.வேலுாரில் தீயணைப்பு நிலையம் அமைக்க இடம் தேர்வு: பணிகள் நடக்காததால் அதிருப்தி
/
ப.வேலுாரில் தீயணைப்பு நிலையம் அமைக்க இடம் தேர்வு: பணிகள் நடக்காததால் அதிருப்தி
ப.வேலுாரில் தீயணைப்பு நிலையம் அமைக்க இடம் தேர்வு: பணிகள் நடக்காததால் அதிருப்தி
ப.வேலுாரில் தீயணைப்பு நிலையம் அமைக்க இடம் தேர்வு: பணிகள் நடக்காததால் அதிருப்தி
ADDED : ஏப் 20, 2024 07:22 AM
ப.வேலுார், : ப.வேலுாரில் தீயணைப்பு நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்தும், எந்த பணியும் நடக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.ப.வேலுார் தாலுகாவில், பரமத்தி, கபிலர்மலை என, இரு ஒன்றியங்கள், ப.வேலுார், பரமத்தி, வெங்கரை, பாண்டமங்கலம், பொத்தனுார் என, ஐந்து டவுன் பஞ்., மற்றும் 40 கிராம பஞ்.,கள் உள்ளன.
இங்கு, தென்னை, வாழை, கரும்பு, வெற்றிலை, மரவள்ளிக்கிழங்கு விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. ஜேடர்பாளையம், கபிலர்மலை, பிலிக்கல்பாளையம், அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் வெல்லம் தயாரிக்கும் ஆலை கொட்டகைகள், நுாற்றுக்கு மேற்பட்டவை உள்ளன. சில நேரங்களில், ஆலை கொட்டகைகள் தீ விபத்தில் சிக்கும் போது தீயணைக்கும் வண்டி வர கால தாமதம் ஆவதால் முற்றிலும் எரிந்து நாசமாகிறது.மேலும், அரசு மருத்துவமனை, சார்பதிவாளர் அலுவலகம், அரசு, தனியார் பள்ளி, கல்லுாரிகள் அதிகம் உள்ளன. கிராமங்களை அதிகமாக கொண்டுள்ள இந்த தாலுகாவில், அவ்வப்போது தீ விபத்தும் ஏற்படுகிறது. அப்போது, தீ மேலும் பரவாமல் தடுப்பதற்கும், தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்பதற்கும், நாமக்கல் அல்லது கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் உள்ள தீயணைப்பு படையினர் தான் வரவேண்டும்.அவர்கள் வருவதற்கு, குறைந்தபட்சம் அரை மணி நேரமும், அதிகபட்சம் ஒரு மணி நேரமும் ஆகிறது. அதற்குள் தீ மேலும் பரவி, பெரும் விபத்து ஏற்படுகிறது. மேலும், ப.வேலுார் வழியாக காவிரி ஆறு செல்கிறது. நீச்சல் தெரியாத நபர்கள், அவ்வப்போது ஆழமான பகுதியில் சிக்கிக்கொள்வது வழக்கம். ஜேடர்பாளையம் தடுப்பணையில் இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. குறிப்பாக, உயிரிழப்பு சம்பவங்கள் அதிகளவில் நடக்கின்றன.இந்நிலையில், ப.வேலுார் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சேகர், சட்டசபையில் வைத்த கோரிக்கையை ஏற்று, 2022 நவ.,ல், ப.வேலுார் தொகுதிக்கு தீயணைப்பு நிலைய அமைக்க, தமிழக அரசு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, கபிலர்மலை அடுத்த பெரிய சோளிபாளையம் பஞ்., சிறுகிணத்துப்பாளையம் கிராமத்தில், தீயணைப்பு நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால், பணிகள் துவங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், ப.வேலுார் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

