/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
10.81 மெட்ரிக் டன் தரமற்ற விதைகள் விற்க தடை
/
10.81 மெட்ரிக் டன் தரமற்ற விதைகள் விற்க தடை
ADDED : நவ 06, 2025 01:59 AM
நாமக்கல், சேலம், நாமக்கல் மாவட்டத்தில், 59.94 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 10.81 மெட்ரிக் டன் தரமற்ற விதைகள் விற்பது தடுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, விதை ஆய்வு துணை இயக்குனர் சித்ரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
விதை சான்றளிப்பு மற்றும் உயிர்ம சான்றளிப்பு துறை விதை ஆய்வுப்பிரிவு சேலம், நாமக்கல் மாவட்டங்களில் அரசு, அரசு சார்பு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்கள் என, 1,393 எண்ணிக்கையில் உள்ளன. இவற்றில் விற்பனை செய்யப்படும் விதைகளின் தரம் குறித்த ஆய்வு அந்தந்த பகுதி விதை ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த மாதம் வரை, 4,427 ஆய்வுகள், 1,393 விதை விற்பனை நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆய்வின்போது, விதைகளின் தரத்தை அறிய, 2,333 விதை மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. பகுப்பாய்வு முடிவில், 92 விதை மாதிரிகள் தரமற்றது என அறிவிக்கப்பட்டன.
இவற்றில், எட்டு விதை மாதிரிகள் எடுக்கப்பட்டு விதை உற்பத்தியாளர்கள் மீது நீதிமன்ற வழக்குகள் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 91 விதைக்குவியல்கள் விற்க தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளன.
தரமற்ற விதைகள் விற்பது முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், 59.94 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 10.81 மெட்ரிக் டன் தரமற்ற விதைகள் விற்பது தடுக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
விதை விற்பனை நிலையங்களில் விவசாயிகள் விதைகளை வாங்கும்போது விதைகளின் தரம் குறித்த விபரங்களை சரிபார்த்து வாங்க வேண்டும். மேலும், வாங்கும் விதைகளுக்குரிய விலை பட்டியல்களை கேட்டுபெற வேண்டும், விதைப்பு முதல் பயிரின் விளைச்சல் வரை அந்த பட்டியலை பத்திரப்படுத்தி வைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

