/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வரத்து அதிகரிப்பால் வாழைத்தார் விலை சரிவு
/
வரத்து அதிகரிப்பால் வாழைத்தார் விலை சரிவு
ADDED : நவ 14, 2025 01:39 AM
ப.வேலுார், நாமக்கல் மாவட்டத்தில் வரத்து அதிகரிப்பு, பண்டிகை நாட்கள் இல்லாதது ஆகிய காரணங்களால் போதிய விலையின்றி வாழைத்தார்களின் விலை வெகுவாக குறைந்துள்ளது.
ப.வேலுார் தாலுகா பகுதிகளில், விவசாயிகள் அதிகளவில் வாழை சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். பூவன், பச்சைநாடன், கற்பூரவள்ளி, ரஸ்தாளி, மொந்தன் உள்ளிட்ட பல்வேறு வகையான வாழைகளை பயிரிட்டுள்ளனர். இவை, உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், ப.வேலுாரில் செயல்பட்டு வரும் தினசரி ஏல மார்க்கெட்டிற்கும் கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது.
இங்கு ஏலம் எடுக்கப்படும் வாழைத்தார்கள், தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன. கடந்த வாரம், 400 ரூபாய்க்கு விற்ற பூவன் வாழைத்தார், தற்போது, 100 ரூபாய்; 400க்கு விற்ற ரஸ்தாளி, 200 ரூபாய்; 300க்கு விற்ற கற்பூரவள்ளி, 130 ரூபாய், ஏழு ரூபாய்க்கு விற்ற ஒரு மொந்தன் பழம், ஐந்து ரூபாயாக விற்பனை செய்யப்பட்டது. தற்போது தேவை குறைந்ததால், வாழைத்தார்கள் தேக்கமடைந்து விலையும் குறைந்துள்ளது. இதனால் உரிய விலை கிடைக்காமல், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

