/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
வங்கி உதவி மேலாளரை ஏமாற்றி திருமணம் பள்ளி, கல்லுாரி நண்பர்களிடம் விசாரிக்க முடிவு
/
வங்கி உதவி மேலாளரை ஏமாற்றி திருமணம் பள்ளி, கல்லுாரி நண்பர்களிடம் விசாரிக்க முடிவு
வங்கி உதவி மேலாளரை ஏமாற்றி திருமணம் பள்ளி, கல்லுாரி நண்பர்களிடம் விசாரிக்க முடிவு
வங்கி உதவி மேலாளரை ஏமாற்றி திருமணம் பள்ளி, கல்லுாரி நண்பர்களிடம் விசாரிக்க முடிவு
ADDED : ஜூலை 12, 2025 01:45 AM
நாமக்கல் :வங்கி உதவி மேலாளரை, ஆர்.டி.ஓ., எனக்கூறி திருமணம் செய்து ஏமாற்றிய தன்வர்த்தினியுடன் படித்த பள்ளி, கல்லுாரி நண்பர்களிடம் விசாரணை நடத்த, குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு குளத்துகாட்டை சேர்ந்தவர் நவீன்குமார், 29; தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் உதவி மேலாளர். இவருக்கும், நாமக்கல் அடுத்த ராமாபுரம்புதுாரை சேர்ந்த தன்வர்த்தினி, 29, என்பவருக்கும், 2024 ஜூன், 12ல், வையப்பமலையில் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது, தன்வர்த்தினி ஆர்.டி.ஓ.,வாக பணிபுரிவதாக தெரிவித்தனர். திருமணம் முடிந்த சில மாதங்களில், தன்வர்த்தினி ஆர்.டி.ஓ., இல்லை என தெரியவந்தது.
இதுகுறித்து, நாமக்கல் மாவட்ட குற்றப்பிரிவில், நவீன்குமார் புகாரளித்தார். புகார்படி, கடந்த, 26ல், தன்வர்த்தினியை கைது செய்து, சேலம் பெண்கள் சிறையில் அடைத்தனர். இதையடுத்து, தன்வர்த்தினி பயன்படுத்திய லேப்டாப், மெமரிகார்டு, மொபைல் போன் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வந்தனர். லேப்டாப் பாஸ்வேர்டு தெரியாததால், இதில் உள்ள தகவல்களை பெற முயற்சித்து வருகின்றனர்.
மேலும், அவரை கஸ்டடி எடுத்து விசாரிக்க, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், நாமக்கல் முதலாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் செகனாபானு, இரண்டு நாட்கள் கஸ்டடி எடுத்து விசாரிக்க, நேற்று முன்தினம் அனுமதி அளித்தார். குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சவீதா தலைமையிலான போலீசார், தன்வர்த்தினியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தன்வர்த்தினிக்கு உதவியாக அவருடன் பள்ளி, கல்லுாரியில் படித்த முன்னாள் மாணவர்கள் இருந்ததாகவும்; அரசு வேலை வாங்கி தருவதாக பலரிடம் பணம் வாங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளதாகவும், புகார் கொடுத்த அவரது கணவர் நவீன்குமார் தெரிவித்திருந்தார். அதனடிப்படையில், இந்த மோசடியில் தொடர்புடைய, அவருடன் பள்ளி, கல்லுாரியில் படித்த சக நண்பர்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே, இந்த வழக்கில் இருந்து தன்னை ஜாமினில் விடுவிக்கக்கோரி தன்வர்த்தினி தாக்கல் செய்த மனுவை, நாமக்கல் முதலாவது குற்றவியல் மாஜிஸ்திரேட் செகனாபானு, நேற்று முன்தினம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.