/
உள்ளூர் செய்திகள்
/
நாமக்கல்
/
மாரியம்மன் கோவிலில் 23ல் முகூர்த்தக்கால் நடல்
/
மாரியம்மன் கோவிலில் 23ல் முகூர்த்தக்கால் நடல்
ADDED : ஏப் 14, 2025 06:49 AM
நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை ஒன்றியம், ஈஸ்வரமூர்த்திபாளையத்தில் பிரசித்தி பெற்ற சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் விழா வரும், 23ல் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. 25 காலை, 9:00 மணிக்கு மேல் கொடியேற்றம் நிகழ்ச்சி நடக்கிறது. 26 இரவு, 7:00 மணிக்கு மேல் விநாயகர், மாரியம்மன், சிவன் மற்றும் கொடி மரத்திற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்பட உள்ளது.
27 மதியம், 11:00 மணிக்கு மாவிளக்கு ஊர்வலத்துடன் பிச்சாண்டவர் அழைப்பும், அமுது படைத்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும். மாலை, 6:00 மணிக்கு மாரியம்மன் அன்ன வாகனத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இரவு, சிறுதொண்ட நாயனார் நாடகம் நடக்கிறது.
பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி
சேந்தமங்கலம்: பேளுக்குறிச்சியை சேர்ந்த வேல்முருகன் மனைவி சத்யா, 40; இவர் நாமகிரிப்பேட்டை ரேஷன் கடையில் விற்பனையாளர். நேற்று மாலை, டூவீலரில் நாமகிரிப்பேட்டையில் இருந்து பேளுக்குறிச்சி பிரதான சாலையில் சென்றுகொண்டிருந்தார்.அப்போது, பின்னால் டூவீலரில் வந்த அடையாளம் தெரியாத வாலிபர்கள் இருவர், சத்யா கழுத்தில் அணிந்திருந்த தாலிக்கொடியை பறிக்க முயன்றனர்.
சுதாரித்துக்கொண்ட சத்யா, கையால் தாலிக்கொடியை இறுக பற்றிக்கொண்டார். இதில் தடுமாறிய சத்யா சாலையில் விழுந்தார். காயமடைந்த அவரை மீட்டு, ராசிபுரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பேளுக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.
மேட்டூர் அனல் மின் நிலையங்களில் 1,230 மெகாவாட் உற்பத்தி நிறுத்தம்
மேட்டூர்: மேட்டூரில், 840, 600 மெகாவாட் அனல்மின் நிலையங்கள் உள்ளன. நேற்று வார விடுமுறை, இன்று தமிழ் புத்தாண்டால் ஊழியர்கள் விடுமுறையில் சென்று விட்டனர். அதேநேரம் நேற்று முன்தினம், 17,062 மெகாவாட்டாக இருந்த தமிழக மின் தேவை, 15,351 மெகாவாட்டாக நேற்று சரிந்தது. இதனால் மேட்டூர், 600 மெகாவாட் அனல்மின் நிலையத்தில் நேற்று காலை, மின் உற்பத்தி தற்காலிக நிறுத்தம் செய்யப்பட்டது.
ஏற்கனவே, 840 மெகாவாட் அனல் மின் நிலையத்தில், 3ம் அலகில், கடந்த டிச., 19ல் விபத்து ஏற்பட்டு மின் உற்பத்தி தடைபட்டுள்ளது. இந்நிலையில் கடந்த, 11ல், 1வது அலகில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்ட நிலையில், நான்காவது அலகில் நேற்று உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் மொத்தம், 1,440 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட மேட்டூர் அனல்மின் நிலையங்களில், நேற்று ஒரு அலகில் மட்டும், 210 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது. 1,230 மெகாவாட் மின் உற்பத்தி தற்காலிக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

